முஸ்லிம் காங்கிரஸின் கட்டமைப்பை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் – ரவூப் ஹக்கீம்

முஸ்லிம் காங்கிரஸின் கட்டமைப்பை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் என்பதுடன், கட்சியின் மேல் மற்றும் கீழ்மட்டத் தொண்டர்களுக்கிடையில் காணப்படும் இடைவெளியைக் களையவேண்டும் என்பதே தற்போது கட்சி எதிர்நோக்கும் சவால் ஆகும் என்று மு.கா. தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை மறுசீரமைப்புச் செய்தல் மற்றும் சம்மாந்துறைப் பிரதேசத்துக்கான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தபோது,

கிராமங்கள் தோறும் கட்சிக் கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் கடந்தகால கசப்புணர்வை மறந்து எதிர்காலத்தில் புதிய யுகம் நோக்கி அனைவரும் ஒன்றாகப் பயணிப்பதற்கான உற்சாகத்தை கட்சிப் போராளிகள் ஏற்படுத்த வேண்டும்.

தற்போதைய நிலைவரப்படி அரசியல் அதிகாரங்களில் மு.கா . அல்லாதவர்கள் அம்பாறை மாவட்டத்தில் கிடையாது. மாவட்டத்தின் அரசியல் அதிகாரத்தை மு.கா. தனது கைகளில் வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால், மு.காவின் அரசியல் பலவீனப்பட்டு விட்டது என்ற பார்வை இன்று பரவலாக ஏற்பட்டுள்ளது. எமது கட்சியை எவராலும் ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாது.

மேலும், மு.காவுக்கு எதிராக இருக்கின்ற எதிரணிக்கு அரசியல் அதிகாரம் கிடையாது. அபிவிருத்திகளை முழுக்க முழுக்க முஸ்லிம் காங்கிரஸே செய்யவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மு.கா. என்ன செய்தாலும், அதனை எதிர்க்கும் எதிரணியினர் இருக்கின்றார்கள். அதுபற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எமது கட்சியைப் பலவீனப்படுத்தும் முயற்சியில் தற்போது பல்வேறு சக்திகள் களமிறங்கியுள்ளன. இவ்வாறான சக்திகளுக்கு மு.கா. போராளிகள் இடங்கொடுக்கக் கூடாது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]