முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை இரண்டு நாட்கள் அனுஷ்டிப்பதற்கு தீர்மானம்!!

கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒரு குறுகிய எல்லைக்குள் நடாத்தினோம். ஆனால் இவ்வருடம் இந்நிகழ்வினை சற்று பரந்தளவில் இரண்டு நாட்கள் அனுஷ்டிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்.

17ம் திகதி இரத்ததான நிகழ்வும், 18ம் திகதி நினைவேந்தல் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கிழக்குப் பல்கலைக்கழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியத் தலைவர் சதாசிவம் டினேஸ்காந்த் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற ஒரு இனஅழிப்பு நாள் மே 18. இந்த இனப்படுகொலையினை நினைவுகூரும் முகமாக தமிழர் தாயகத்தில் அனைத்து இடங்களிலும் அனுஷ்டிப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அனுஷ்டிப்பு நிகழ்வுகள் இத்துடன் நின்றுவிடாது எதிர்வருகின்ற காலங்களிலும் எமது அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும். இதற்காக எமது அரசியற் தலைமைகள் சிறந்த வழிவகைகளை அமைத்து எதிர்கால சமுதாயத்திற்கு இவ்வாறானதொரு அழிவு நடைபெற்றிருக்கின்றது, இனிவரும் காலங்களில் இவ்வாறான துயர் நடைபெறாமல் இருப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இந்த நினைவு நாளை அனுஷ்டிப்பதற்கு எவ்வித தடையும் இன்றி தற்போதைய காலத்தில் செய்வது போன்று எதிர்காலத்திலும் செய்ய வேண்டும்.

முள்ளிவாய்க்கால் படுகொலை அனுஷ்டிப்பு நிகழ்வினை கிழக்குப் பல்கலைக்கழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியம் கடந்த வருடம் ஒரு குறுகிய எல்லைக்குள் நடாத்தினோம். ஆனால் இவ்வருடம் இந்நிகழ்வினை சற்று பரந்தளவு ரீதியில் இரண்டு நாட்கள் அனுஷ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

முதல் நாள் 17ம் திகதி இரத்தான நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளோம். அத்துடன் 18ம் திகதி சிறப்பான ஒரு அனுஷ்டித்தலையும், நினைவேந்தலையும் எமது கலைகலாசார பீடத்திற்கு முன்னாள் நடாத்தத் தீர்மானித்துள்ளதுடன் உயிரிழந்த எமது உறவுகளுக்காக ஒரு ஆராதணை நிகழ்வையும் ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கல்விசார், கல்விசாரா ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.

இது எமது தமிழினத்தின் அழிப்புக்குரிய அடையாளமாகக் கொள்ளப்படுகின்ற நாள். இந்த நாளை நாங்கள் அனுஷ்டிப்பதற்கு எவ்வித தடையும் இல்லாமல் வழிவகைகளைச் செய்து தருவதோடு, எதிர்காலத்திலும் இவ்வாறான எமது இன அழிப்பு நினைவுகூரல்களை மேற்கொள்வதற்குரிய ஏற்பாடுகளையும் அனைத்து தரப்பினரும் செய்து தரவேண்டும் என் நாங்கள் இவ்விடத்தில் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]