முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்- வட மாகாண சபையுடன் பல்கலை மாணவர்கள் இணைந்து செயற்படாமைக்கு காரணம் என்ன?

வடமாகாண சபையுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டித்தால், தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசியகூட்டமைப்பு சார்பாக செயற்படுவதாக சேறு பூசுவார்கள். கடந்த 3 வருடங்களாக ஒன்றுமையைத் தர முடியாதவர்களினால் இந்த வருடத்தில் மட்டும் ஒற்றுமையைத் தந்துவிடுவார்கள் என்பதில் துளி அளவும் நம்பிக்கையில்லை.

பிரிவினைவாதமின்றி நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த முடியாதவர்களினால் இந்த வருடம் அனைவரையும் ஒன்றிணைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த முடியாது. இளைஞர் சக்திகளாகிய மாணவர்களிடம் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒப்படையுங்கள் நாங்கள் அனைவரையும் ஒன்றிணைத்து உணர்வு பூர்வமாக நடாத்துகின்றோம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கிருஸ்ணமீனன் தெரிவித்தார்.

எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுதின அஞ்சலி நிகழ்வுகள் நடாத்துவது தொடர்பாக வடமாகாண சபையினருடன் இணைந்து செயலாற்றமல், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நடாத்துவமாறு மாணவர்கள் கோரியிருந்தார்கள். மாணவர்களின் கோரிக்கைகளை வடமாகாண சபையினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், முதலமைச்சர், வடமாகாண சபையின் ஏற்பாட்டில் கடந்த 3 வருடங்களாக நடாத்திவரும் நிலையில், எவ்வாறு மாணவர்களிடம் அந்த பொறுப்புக்களை ஒப்படைப்பது என்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் சிறு முறுகல் நிலை காணப்படுகின்றது.

அந்தவகையில், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பொது அமைப்பினர் இன்று (11) யாழ்.மிலேனியம் விருந்தினர் விடுதியில் கூடி கலந்துரையாடினார்கள். அந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்..

மாணவர்களின் குரல்களை நசுக்குவதற்கு திட்டமிட்டு தமிழ் மக்களின் குரலை நசுக்குவதற்கும் திட்டமிட்டு சதி செய்துள்ளார்கள். இவ்வாறான செயற்பாடுகளை இனியும் செய்ய வேண்டாமென கேட்டுக்கொண்டுள்ளனர்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் சந்தித்து கலந்துரையாடுவதற்கு மத்தியஸ்தர் குழு ஒன்றினை நியமித்துள்ளோம். மக்களின் நோக்கமாகவும், மாணவர்களின் நோக்கமாகவும் முதலமைச்சரை அக்குழுவினர் சந்திக்கவுள்ளனர்.

சந்திப்பதற்கான நேரத்தினை முதலமைச்சர் ஒதுக்கித் தர வேண்டுமென்றும் மாணவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.முள்ளிவாய்க்கால் பேரவலத்தினை எழுச்சியுடனும், ஒற்றுமையுடனும், நினைவேந்தல் செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம். அதற்கு அனைத்து சிவில் அமைப்புக்கள், அரசியல்கட்சிகள், அரசியல் பிரதிநிதிகள் அனைவரையும் கலந்கோள்ளுமாறு மிகவும் அன்பாக வேண்டிக்கொள்கின்றோம்.

மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து அவற்றினை நிறைவேற்ற வேண்டியது அரசியல்வாதிகளின் கடமையாகும். மாறாக மக்களுக்கு இது தான் தேவை என அரசியல்வாதிகள் தீர்மானிக்க முடியாது.மக்களின் தேவை என்ன என்பதனை மாணவர் சமூகமாகிய நாமும், சிவில் அமைப்பினரும் தெரிவிப்போம். அதன் நிகழ்ச்சி நிரலில் முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டுமென்று எமது விருப்பம்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒற்றுமையாக உணர்வுபூர்வமாக நடைமுறைப்படுத்த எமது எண்ணங்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

கட்சி பேதமின்றி அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டுமென்பதே எமது நோக்கம்.முதலமைச்சரையோ, வடமாகாண சபையினையோ செய்ய வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால், வடமாகாண சபையினரால் அனைவரையும் ஒரு குடையின் கீழ்க்கொண்டுவர முடியாது.

அது சாத்தியமற்ற ஒரு விடயம். 3 வருடங்களாக கொண்டு வர முடியாத ஒற்றுமையை, இந்த வருடம் கொண்டு வந்துவிடுவார்கள் என்பதில் துளி அளவும் நம்பிக்கை இல்லை. இதை பார்த்துக்கொண்டு ஊமைகளாக இருக்க முடியாது. எங்களால் முடியும். முதல்வருக்கு எம்மைப் பற்றி தவறாக சொல்லி, முதலமைச்சரை தீய சக்தி ஒன்று ஆளுகின்றது.

தமிழனத்திற்கு விடுதலையையோ தீர்வினையோ பெற்றுக்கொடுக்க கூடாது என நினைக்கும் பேரினவாதம், எமக்குள் இருக்கும் அடிவருடிகளை வைத்து அவ்வாறு செயற்பட்டால், அவ்வாறான பேரினவாதிகளுக்கு எமது முதலமைச்சரோ, அரசியல்கட்சி பிரதிநிதிகளோ விலை போக வேண்டாம்.மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். எமது உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள், எங்களுடன் கூட இருங்கள். எந்த சந்தர்ப்பத்திலும், பேரினவாத சக்திகளிடம் உங்களை விட்டுக்கொடுக்கவோ தரக்குறைவாக பேசவோ இடமளிக்கமாட்டோம்.

வடமாகாண சபையினர் கடந்த 3 வருடங்களாக தாம் ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், ஏன் நீங்கள் அவர்களுடன் இணைந்து நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க முடியாது என ஊடகவியலாளார்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதன்போது, நாம் வடமாகாண சபையுடன் இணைந்துசெயற்பட்டால், ஒரு கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றோம் என்றே சேறு பூசப்படும். படித்த சமூகமாகிய எங்களை காசு வாங்கிவிட்டுச் செயற்படுகின்றார்கள் என சேறு பூசுகின்றார்கள். நாங்கள் வடமாகாண சபையுடன் இணைந்தால், தமிழரசுக்கட்சிக்கு விலை போகிவிட்டோம். கூட்டமைப்பிற்கு விலைபோகிவிட்டதாக கூறுவார்கள். தமிழ் இளைஞர்களாக இளைய சமூகம் நாங்கள் நிற்கின்றோம். நாங்கள் தலைமை தாங்கவில்லை.

நடுநிலையாக நின்று உங்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கின்றோம். அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணையுங்கள் எமது உரிமைக்காக ஒன்றுபடுங்கள். எங்களின் கருத்துக்களுக்கு செவிமடுங்கள். ஏனைய கட்சிகள் ஒன்றிணைய மறுக்கும் சந்தர்ப்பத்தில் வடமாகாண சபையினால் பிரிவினைவாதம் இன்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த முடியுமென்றால், அவர்களுடன் இணைந்து செயற்பட எம்மால் முடியும்.

கடந்த 3 வருடங்களாக பிரிவினைகளின்றி நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்த முடியாத மாகாண சபையினால் இந்த வருடத்தில் அவ்வாறு நடாத்த முடியாது. மாணவர்களினால் பிரிவினைவாதமின்றி வெகு உணர்ச்சியாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்ய முடியும். அரசியல் ஆதாயம் தேட அனுமதிக்க முடியாதென்றும் மேலும் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]