முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் வடக்கு முதல்வர் முக்கிய அறிவிப்பு!!

மே 18 ஆம் திகதி நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுதினம் வடமாகாண சபையின் ஏற்பாட்டில் நினைவுகூறப்படுமென்றும், அந்த நிகழ்வுகளில், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்களை இணைந்து நினைவு நிகழ்வுகளை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (07) வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. அந்த கலந்துரையாடல்கள் இரு வகையாக நடைபெற்ற போது, முதல் கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை அமைச்சர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். அதன் பின்னர், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர்களுடன் முதலமைச்சர் உட்பட வடமாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

சுமார் 3 மணித்தியாலயங்கள் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. கடந்த 3 வருடங்களைப் போன்று இந்த வருடமும் வடமாகாண சபையின் ஏற்பாட்டில் நடாத்துவதற்கு வடமாகாண சபை உறுப்பினர்களினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவிடம் அமைந்துள்ள பிரதேசம் காணி அமைச்சின் கீழ் வருவதனால், நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க நினைவேந்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளனர். எமது இனத்திற்கு ஏற்பட்ட பேரவலத்தின் நினைவு கூறும் நிகழ்வு என்ற காரணத்தினால், வடமாகாண சபையுடன் இணைந்து நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க பல அமைப்புக்கள் தமது விருப்பத்தினை தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், நாளை புதன்கிழமை (09) காலை 11.30 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண முதலமைச்சர் அலுவலத்தில் நடைபெறவுள்ளது. அந்த கலந்துரையாடலில் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள அமைப்புக்களில் இருந்து இருவரை கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளேன்.

அதேநேரம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் வடமாகாண சபை இவ்வளவு வருடங்களும் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்து வந்ததை ஏற்றுக்கொள்வதாகவும், கடந்த வருடம் 4 இடங்களில் வெவ்வேறாக நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றமையினால், நிகழ்வுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் நடாத்துவது நல்லதென தெரிவித்திருந்தார்கள். கடந்த வருடம் அனைவரையும் ஒன்றிணைத்து வடமாகாண சபையினால் நிகழ்வினை நடாத்த முடியாமல் போய்விட்டதென்றும், ஆகையினால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடம் ஒப்படைத்துவிடுமாறும், தாம் அனைவரையும் ஒன்றிணைத்து நினைவு நிகழ்வுகளை நடாத்ததுவதாகவும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

மாணவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதுடன், வடமாகாண சபையினர், ஜனநாயக ரீதியாக பொதுமக்களுடன் கலந்தாலோசித்து செயற்படுத்துவதனால், வேறு விதங்களில் கையாள்வது சரியனெ தோன்றவில்லை.

எனவே, வடமாகாண சபையுடன் இணைந்து செயற்பட விருப்பமாயின், நினைவேந்தல் நிகழ்வுகள் அழகுபடுத்தல், நுழைவாயில் வடிவமைத்தல், பிரதான சுடர் ஏற்றுதல், பொது மக்கள் ஏற்றும் சுடர் தொடர்பான ஒழுங்கமைப்புக்கள், பந்தல் மற்றும் கதிரை ஒழுங்குகள், பொலிஸாரின் அனுமதி பெறல், மாவட்ட ரீதியான போக்குவரத்து ஏற்பாடுகள், தாக சாந்தி ஏற்பாடுகள் உள்ளிட்ட பல ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியுள்ளதால், அவற்றில் ஒன்றினை நடைமுறைப்படுத்த முன்வருமாறு கேட்டுக்கொண்டதற்கு மாணவர்கள் சம்மதிக்கவில்லை.

 

ஆகையினால், நாளை (09) நடைபெறவுள்ள கலந்துரையாடலின் போது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுக்குழுவினருடன் தமது கருத்துக்களை முன்வைத்து, அந்த குழுவினர் எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்த எத்தணித்துள்ளதென்றும், அந்த கலந்துரையாடலின் பின்னர் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படுமென்றும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.