முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளத்தினை அதிகரிக்கும் பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேற்றம்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளத்தினை அதிகரிக்கும் பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேற்றம்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளத்தினை அதிகரிக்குமாறு கொண்டுவரப்பட்ட பிரேரணை வடமாகாண சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

வடமாகாண சபையின் 111வது அமர்வு இன்று (05.12) கைதடியில் அமைந்துள்ள பேரவையில் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது. அதன்போது, வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டுமென்ற பிரேரணையினை ரி.லிங்கநாதன் முன்மொழிந்தார்.

அதன் பின்னர் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில், தற்போது, 6000 ஆயிரம் ரூபா வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 2018 ஆம் ஆண்டில் இருந்து அந்த சம்பளம் முழுமையாக கிடைக்கும். இருந்தும், சம்பளத்தினை அதிகரிக்குமாறு முன்பள்ளி ஆசிரியர்களிடமிருந்து கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக அரசாங்கத்திடம் அவ்வளவு நிதி இருக்குமா என்பது சந்தேகம், இருந்தாலும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் பரிசீலணை செய்வோம். என்றார்.

கிளிநொச்சியில் 237 முன்பள்ளிகள் உள்ளன. சிவில் பாதுகாப்புப் பிரிவினரால் முன்பள்ளிகள் நடாத்தப்படுகின்றன. அதனால், முரண்பாடுகள் அங்கு காணப்படுகின்றன. நிகழ்வுகளின் போது மாகாண கொடிகள் ஏற்றப்படுவதில்லை. இராணுவத்தினரால் வழங்கப்படும் சீருடைகள் போடப்படுகின்றன. இதனால் அங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றதுடன், அங்குள்ள மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் வடமாகாண விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் சிவநேசன் சுட்டிக்காட்டினார்.

இருந்தும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் மாகாண கல்வி அமைச்சினால் 6000 ரூபா வழங்கப்படுகின்றது. அதற்காக 160 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுகின்றன என்றும் மீண்டும் முதலமைச்சர் பதிலளித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினரால் முன்பள்ளிகள் நடாத்தப்படுகின்றன. இராணுவத்தினைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இராணுவம் 35 ஆயிரம் ரூபா கொடுக்கின்றதென்றால், நாங்கள் 6000 கொடுக்கின்றோம். இவ்வாறு சம்பளம் வழங்குவதனால்; அங்கு பாகுபாடு காணப்படுகின்றது. அத்துடன், அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இராணுவப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. அது தவறான விடயங்கள் . வடமாகாணத்தில் இவ்வாறான கட்டமைப்புக்கள் இருக்க முடியாது. எனவே, அதற்குரிய நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும் என ஆர்னோல்ட் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் 21 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றார்கள். அந்த முன்பள்ளிகளுக்கு தொழில்திணைக்களத்தினர் சென்று ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் பங்களிப்பு நிதி ஆகியவற்றினை செலுத்த வேண்டுமென்று தெரிவித்த போது, தமக்கு 6 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது, அந்த சம்பளத்தில் எவ்வாறு ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் பங்களிப்பு நிதி கட்ட முடிம் என முன்பள்ளி ஆசிரியர்கள் கேட்டதற்கு, 13,500 ரூபா சம்பளம் கொடுக்க வேண்டும், என்றும் முன்பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். எனவே, தொழில் துறைத்திணைக்களத்தினை அழைத்து முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பிலும், அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடுமாறு முதலமைச்சரிடம் எதிர்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா வலியுறுத்தினார்.

இவ்வாறு உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்த நிலையில், முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைகள் உள்ளுராட்சி அமைச்சின் கட்டுப்பாட்டில் வருவதனால், உள்ளுராட்சி அமைச்சர் அவற்றினைக் கையாள வேண்டுமென்று தெரிவித்து, முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்தற்கான பிரேரணையினை சபை ஏற்றுக்கொள்கின்றதாக கூறி பிரேரணையினை நிறைவேற்றினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]