முதிரை மற்றும் பாலை மரக்குற்றிகள் பளை வட்டார வனவள காரியாலய அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன

முதிரை மரக்குற்றிகள்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அரசாங்க ஒதுக்கக்காடுகளில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பெறுமதிமிக்க ஒரு தொகுதி முதிரை மற்றும் பாலை மரக்குற்றிகள் பளை வட்டார வனவள காரியாலய அதிகாரிகளினால் இன்று (22) கைப்பற்றப்பட்டுள்ளன.


கடந்த சில தினங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் ஒரு லொறியிலும் ஏற்றிச்செல்லப்பட்ட 39 மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டதாக வட்டார வனவள உத்தியோகத்தர் எம்ஏஎல் ஹக்கீம் தெரிவித்தார்.

இதுதொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நான்குபேர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் நாகபட்டுவான் மற்றும் கொவிக்கொடுத்தாவில் ஆகிய பகுதி அரசாங்க ஒதுக்கக் காடுகளில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டதாக இம்மரக்குற்றிகள் பூநகரி, முழங்காவில் மற்றும் முட்கொம்பன் ஆகிய பகுதிகளினூடாக எடுத்துச் செல்லப்பட்டபோது கைப்பற்றப்பட்டுள்ளன.