முதலை கௌவிச் சென்ற மூதாட்டியின் சடலம் விசரோடை ஆற்றிலிருந்து மீட்பு

மட்டக்களப்பு புணாணை, மயிலந்தன்னை – விசரோடை ஆற்றிலிருந்து முதலை கடித்த நிலையில் மூதாட்டி ஒருவரின் சடலத்தை தாம் மீட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மயிலந்தன்னை கிராமத்தைச் சேர்ந்த பொன்னன் மாரியாயி (வயது 71) என்பவரின் சடலமே வியாழக்கிழமை 23.08.2018 பகலளவில் மீட்கப்பட்டது.

புதன்கிழமை தனது உறவினருக்கு மதிய உணவை ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு பிற்பகல் 1.30 மணியளவில் குளிப்பதற்காக விசரோடை ஆற்றுக்குச் சென்றவர் மாலையாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் புதன்கிழமை இரவு மூதாட்டி காணமல் போனது பற்றி வாழைச்சேனைப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

அதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த வாழைச்சேனைப் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொலிஸ் அதிகாரி சார்ஜன்ற் ஈசாலெப்பை பதுர்தீன் தலைமையிலான குழுவினர் வியாழக்கிழமை நண்பகலளவில் சடலத்தை ஆற்றின் மருங்கிலிருந்து மீட்டனர்.

இந்த மூதாட்டி குளித்துக் கொண்டிருக்கும்போது அவரைக் கௌவிச் சென்றுள்ள முதலை கிட்டத்தட்ட மூதாட்டியின் உடலின் முக்கால்வாசிப் பங்கை உட்கொண்டிருப்பது சடலத்தைப் பரிசோதனை செய்ததிலிருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸார் கூறினர்.

மூதாட்டியின் வலது காலும் பின்புறமுமே அடையாளம் காணக் கூடிய வகையில் எஞ்சியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உடற்கூறாய்வுக்காக சடலத்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]