முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் 28 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி

முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் 28 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டி-20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்கா அணியின் தலைவர் டுமினி பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

இந்தியா சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, தவான் ஆகியோர் களமிறங்கினர். ஒருநாள் தொடரில் திணறிய ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 9 பந்தில் தலா இரண்டு பவுண்டரி, சிக்ஸ் உடன் 21 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இந்திய அணிஇந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. பாண்டியா 7 பந்தில் 13 ரன்னும், மணீஷ் பாண்டே 27 பந்தில் 29 ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.

இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. அந்த அணியின் ஸ்மட்ஸ் , ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

அந்த அணியில் ஹென்ரிக்ஸ் மட்டும் தாக்கு பிடித்து சிறப்பாக ஆடினார். அவருக்கு மற்ற வீரர்கள் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹென்ரிக்ஸ் 50 பந்துகளில் ஒரு சிக்சர், 8 பவுண்டரியுடன் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பெஹார்டியன் 27 பந்துகளில் 2 சிக்சர்கள், 3 பவுண்டரியுடன் 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 24 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்து அசத்தினார். உனத்கட், பாண்ட்யா, சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

ஆட்ட நாயகன் விருதை புவனேஷ்வர் குமார் வென்றார்.