முடிவுக்கு வந்தது மோதல்

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள், இரண்டரை மணிநேரப் பேச்சுக்களை அடுத்து, சமாதானமான முறையில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பஜெட் வீதியில் உள்ள தனது வதிவிடத்தில் பிரதமருடன் அவர் இரண்டரை மணிநேரம் பேச்சுக்களை நடத்தினார்.

கூட்டு அரசின் பங்காளிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான உறவுகளில் எரிச்சலூட்டும் வகையிலான தொடர் பிரச்சினைகள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது குறைந்தபட்சம், பிரதானமான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

கூட்டு அரசாங்கம் முழுப் பதவிக்காலமும் தொடர வேண்டும் என்று வலியுறுத்தும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மகிந்த சமரசிங்க, சரத் அமுனுகம, மகிந்த அமரவீர, துமிந்த திசநாயக்க ஆகிய நான்கு அமைச்சர்களே இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்து ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் இந்த அமைச்சர்கள் முக்கிய பங்காற்றியிருந்தனர்.

இவர்கள், ஐதேகவின் முக்கியஅமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, கபீர் காசிம் ஆகியோரைச் சந்தித்துப் பேசியதை அடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு பிரதமரும் ஜனாதிபதியும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த பேச்சுக்களின் போது, அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக முன்னெடுப்பது குறித்தும், 2015 ஜனவரி தேர்தலின் போது மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]