முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு

பயணிகள் சேவையில் ஈடுபட்டுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளின் வயதெல்லை 35 இற்கும் 70 இற்கும் இடைப்பட்டதாக காணப்படல் வேண்டும் என போக்குவரத்து அமைச்சு வரையறை விதித்துள்ளது.

இலக்கம் 2081/44 ஆம் இலக்க அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறித்த நபர் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், குறைந்த பட்சம் 2 வருட அனுபவம் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும் எனவும் அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

தகைமைகளை முழுமைப்படுத்தியவர்கள் வைத்திய பரிசோதனை அறிக்கை மற்றும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியாக இல்லையென்ற பொலிஸ் அறிக்கை என்பவற்றுடன் 2 ஆயிரம் ரூபா கட்டணத்துடன் முச்சக்கரவண்டி பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான சிறப்பு அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம்.

உரிய தகைமை பெற்ற விண்ணப்பதாரி தனது விண்ணப்படிவத்தை மேற்படி ஆவணங்களுடன் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதன்பின்னரே, பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான முச்சக்கரவண்டி சிறப்பு அனுமதிப் பத்திரம் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் விநியோகிக்கப்படும் எனவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு அனுமதிப் பத்திரம் இல்லாமல் முச்சக்கரவண்டிகளில் பயணிகளை ஏற்றிச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]