முகப்பு News Local News மீராவோடை உப தபாலகத்தைத் தரமுயர்த்துமாறு வேண்டுகோள்

மீராவோடை உப தபாலகத்தைத் தரமுயர்த்துமாறு வேண்டுகோள்

சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு – கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மீராவோடை உப தபாலகத்தைத் தரமுயர்த்துமாறு பிரதேச மக்கள் அமைப்புக்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இத்தபாலகம் 1953.04.16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இன்றுவரை அது தரமுயர்த்தப்படாத நிலையில் உப தபாலகமாகவே இயங்கி வருகின்றது.
மேலும் இந்த உப தபாலகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதற்கானதொரு நிரந்தர கட்டிடம் இல்லாத நிலையில் பல்வேறுபட்ட சிரமங்களுக்கு மத்தியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களில் இயங்கிவந்தது.

பின்னர், மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாயலுக்குச் சொந்தமான காணியில் ஒரு சிறு பகுதியினை பெற்று உப தபாலகத்திற்கான நிரந்தர கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கு பள்ளிவாசல் நிருவாகத்தினரிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக பள்ளிவாயல் காணியிலிருந்து ஒரு துண்டுக் காணியை உப தபாலக கட்டிடம் அமையப்பெறுவதற்கு பள்ளிவாசல் நிருவாகம் நன்கொடையாக வழங்கியிருந்தனர்.

அதன் பிற்பாடு, அப்போது தபால், தபால் தொலைத் தொடர்பு சேவைகள் அமைச்சராக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், தற்போதைய நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் தனது தபால் அமைச்சினூடாக ரூபா. எண்பத்தியேழு இலட்சம் (8700000) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சகல நவீன வசதிகளையும் கொண்ட வகையில் மீராவோடை உப தபாலகத்திற்கான கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு பின்னர் நீதி அமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீம் அவர்களினால் 2011.11.11 ஆம்திகதி உத்தியோகபூர்வமாக திறந்தும் வைக்கப்பட்டது.

இதேவேளை, இத்தபாலகத்தைத் தரமுயர்த்துவதற்கு கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷிப்லி பாறுக் 2016ஆம் ஆண்டிலிருந்து இதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தார்.
அந்த தொடர் முயற்சியின் பயனாக மட்டு மாவட்ட பெரும்பாக அஞ்சல் அத்தியட்சகருடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நேரில்சென்று கலந்துரையாடி இவ் உப தபாலகம் தபாலகமாக தரமுயர்த்தப்பட வேண்டியதன் அவசியத்தினை உணரச் செய்து தயாரிக்கப்பட்ட ஆவணங்களையும் கையளித்திருந்தார்.

மாகாண சபை உறுப்பினரினால் கையளிக்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்ட மாவட்ட பெரும்பாக அஞ்சல் அத்தியட்சகர் அதிகாரிகள் மட்டத்தில் நிருவாக ரீதியில் இவ் உப தபாலகத்தினை தபாலகமாக தரமுயர்த்துவதற்குரிய மேலதிக ஆவணங்களும் தயாரிக்கப்பட்டு சகல சிபாரிசுகளுடனும் தபால், தபால் தொலைத்தொடர்பு சேவைகள் அமைச்சுக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

அதன் பிற்பாடு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மஹ்ரூப் ஊடாக தபால், தபால் தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் அவர்களை கொழும்பிலுள்ள அவரின் அமைச்சில் நேரடியாக சந்தித்து மீராவோடை உப தபாலகத்தை தபாலகமாக தரமுயர்த்துவது தொடர்பாக கலந்துரையாடியிருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com