மீனவர்களை விடுவிக்காவிட்டால் வேலைநிறுத்தம்

இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்யக்கோரி, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இராமேஸ்வர மீனவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இராமேஸ்வர விசைப்படகுகள் மீனவர்கள் சங்கம், இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருவாரத்தில், இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், அவர்களை விடுதலை செய்யக்கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மீனவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இது குறித்து இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் நடவடிக்கைகள் எடுக்க தாமதம் ஏற்பட்டால் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும் மீனவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, 850 க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தப்படும் என்றும், சுமார் 10 ஆயிரம் மீனவர்களும் 5 ஆயிரம் மீன்பிடி சார் தொழிலாளர்களும் வேலையிழக்க நேரிடும் என்று குறித்த மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]