மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வானிலை அவதான நிலையம்!!

இந்திய பெருங்கடலில் தெற்கு இலங்கைக்கும் மாலத்தீவு மற்றும் கன்னியாகுமரிக்கும் இடையே நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை அப்பகுதியில் தொடர்ந்து நீடித்து வருகிறது என்று இந்திய வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசை நோக்கி சென்று தென்கிழக்கு அரபிக்கடல் (மாலத்தீவு) நோக்கி நகரும் என்று இந்திய வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி திருவனந்தபுரத்தில் இருந்து 390 கி.மீ தெற்கு-தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் வலுப்பெற்று நகரும் என்றும் வானிலை மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழகத்தில் கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வரும் நிலையில், 51 விசைப்படகுகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற 600க்கும் மேற்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதைத்தொடர்ந்து இந்திய கடல் தகவல் சேவை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வரையிலான கடல் பகுதியில் 7 முதல் 9 அடி உயரத்திற்கு பேரலைகள் எழக்கூடும். மணிக்கு 50 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 65 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளி காற்றும் வீசும். எனவே மீனவர்கள் தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, கன்னியாகுமரி கரையோர பகுதிகள், இந்திய பெருங்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை போன்று கேரளாவில் விழிஞ்ஞம் முதல் காசர்கோடு வரையிலான கடலோர பகுதிகளில் அசாதாரணமான காற்றும், 8 முதல் 10 அடி உயரத்திற்கு அலைகள் எழும் வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினிக்காய், லட்சத்தீவு பகுதிகளிலும் மீனவர்களுக்கு இதுபோன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீன்பிடிக்காமல் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர். குமரி மாவட்டத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற நிலையில் இவர்கள் குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் மட்டுமின்றி கேரள கடலோர பகுதிகளான கொல்லம், கொச்சி உள்ளிட்ட துறைமுக பகுதிகளிலும், லட்சத்தீவு நோக்கியும் கரை திரும்பி வருகின்றனர்.

அதில் லட்சத்தீவு அருகே உள்ள கல்பேனி பகுதியில் 40 படகுகளும், மால்பின் பகுதியில் ஏராளமான படகுகளும், கல்பட்டி பகுதியில் 30 படகுகளும், கார்வார் துறைமுக பகுதியில் 20 படகுகளும் கரை சேர்ந்துள்ளன. இவற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தீவு பகுதிகளில் பாதுகாப்பாக உள்ளனர். இருப்பினும் வடக்கு அரபிக்கடல் பகுதியில் 51 விசைப்படகுகளில் சென்ற 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பாமல் நடுக்கடலில் சிக்கி தவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் குமரி மாவட்டம் தூத்தூர் மற்றும் சின்னத்துறை பகுதிகளை சேர்ந்தவர்கள். இதற்கிடையே நேற்று காலை கடலோர காவல்படைக்கு சொந்தமான விமானம் மூலம் கொச்சி பகுதியில் வான்வெளியில் சென்று லட்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்களுக்கு காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்பான எச்சரிக்கை தகவல் தெரிவிக்கப்படும் என்று மீன்துறை அதிகாரி சமீரான் தெரிவித்துள்ளார்.

மீன்வளத்துறை சார்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை நடவடிக்கை மூலம் 502 படகுகள் பாதுகாப்பாக கரைக்கு திரும்பி விட்டது. மேலும் 51 படகுகள் லட்சத்தீவு, கர்நாடகா, கோவா கடல் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர், மற்றும் விமானங்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படும். அதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 135 பெரிய படகுகளும், ராமநாதபுரத்தில் இருந்து 15 பெரிய படகுகளும் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றது. ஆனால் அவை அனைத்தும் பாதுகாப்பாக கரைக்கு திரும்பி விட்டன.

2017 நவம்பர் மாதம் 29 ஆம்திகதி உருவான ஓகி புயல் தாக்கம் டிசம்பர் 6ல் வலுவிழந்தது. இலங்கை, தென் இந்தியா, மாலத்தீவு ஆகிய இடங்களை தாக்கியது. 245 பேர் பலியானார்கள். 665 பேர் காணாமற்போனார்கள் என இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]