மீனவரின் மரணமே, கடலில் துப்பாக்கிச் சூட்டில் நிகழ்ந்த கடைசி மரணமாக இருக்க வேண்டும் தமிழக : அரசியல்வாதிகள் கண்டனம்

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாகக் கூறப்படும் மீனவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அதனைக் கண்டித்தும், தமிழ்நாடு, தங்கக்சிமடத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்று, ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, போராட்டத்தில் பங்குபற்றியுள்ள தமிழக அரசியல்வாதிகள், பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

“மீனவப் பிரச்சினை குறித்து, தமிழக அரசு எத்தனையோ தடவைகள் கடிதம் எழுதியுள்ளது. எனினும் அதற்கு எந்தவொரு தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

இலங்கை அரசாங்கத்துக்கு, மத்திய அரசாங்கம் இதுவரை கண்டனம் கூட தெரிவிக்காமல் இருப்பது வியப்பளிக்கிறது. தமிழக மீனவர்களை, மத்திய அரசாங்கம் இந்திய குடிமகனாக கருதவில்லையோ, என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது” என்று, கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
“இந்த மீனவரின் மரணமே, கடலில் துப்பாக்கிச் சூட்டில் நிகழ்ந்த கடைசி மரணமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் நடைபெற்று வரும் நெடுவாசல், தாமிரபரணி, வடகாடு உள்ளிட்டப் போராட்டங்களை திசை திருப்பவே, மீனவர் மீதான இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது” என்று, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.