மீதொட்டமுல்ல மக்களுக்கு வெகுவிரை வில் வீடுகள் ; நேரடி விஜயத்தில் பிரதமர் உறுதி

மீதொட்டமுல்ல மக்களுக்கு வெகு விரைவில் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இன்று காலை குறித்த குப்பை மேடு சரிந்துவிழுந்த பிரதேசத்திற்கு வியட்னாமில் இருந்து வந்த பிரதமர் நேரடி விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

அத்துடன், இந்தச் சம்பவத்திற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். வெகு விரைவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க அரசு முழு வீச்சுடன் செயற்படும் என்று இதன்போது உறுதியளித்தார்.

பிரதமர் இதன்போது மேலும் கூறியதாவது,

மீட்புப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்தக் குப்பைமேட்டினால் ஏற்படும் ஆபத்தை தவிர்ப்பதற்கான நடவடிக்கையை இராணுவம், பொலிஸாரை பயன்படுத்தி மேற்கொண்டு வருகின்றோம்.

வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை வழங்க தீர்மானித்திருப்பதோடு நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இடங்களைத் தெரிவுசெய்துள்ளோம். மே, ஜுன் மாதங்களில் அந்த வீடுகளுக்கு இவர்களை அழைத்துச் செல்லும் வரை மாற்று நடவடிக்கையை மேற்கொள்ளப்படும்.

இழக்கப்பட்ட பொருட்கள், சொத்துக்கள் தொடர்பில் கணக்கெடுப்புக்கள் இடம்பெறுகின்றன. வெள்ளிக்கிழமை இந்தக் கணக்கெடுப்பு கிடைக்கும். உலக வங்கி மற்றும் ஜப்பான் நாட்டிலிருந்தும் குழுக்கள் இங்கு வரவுள்ளன. இந்த குப்பைகளை இனியும் இங்கே இருக்காது.

இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சில நடவடிக்கைகளை எடுத்தோம். சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு தாமதமாகியது. அதனால் உயிர்கள் பலியாகின. இதற்கான பொறுப்பை நாங்களும் ஏற்கத்தான் வேண்டும். சமுதாயமும் இதனை ஏற்க வேண்டும். இப்பிரச்சினைக்குத் தீர்வுகண்டு பாதிக்கப்பட்ட மக்கள் இயல்புவாழ்க்கையை நடத்த ஏற்பாடு செய்துகொடுக்கப்படும் என்றார்.

கடந்த 14ஆம் திகதி மீதொட்டமுல்ல பகுதியில் காணப்படும் குப்பைமேடு சரிந்து விழுந்ததில் இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 11 பேர் காயமடைந்ததுடன், பலர் காணாமல் போயுள்ளனர். கோடி கணக்கான மக்களின் சொத்துகளுக்கும் இழப்பு ஏற்பட்டது.

பாதுகாப்புத் தரப்பு மீட்பு பணியில் நேற்று ஆறாவது நாளாகவும் ஈடுபட்டிருந்தது.மீதொட்டமுல்ல

இங்குள்ள மக்கள் தமதுக்கு உதவிகள் அவசியமில்லை நிம்மதியாக வாழ்வதற்கான ஒரு வீட்டை மாத்திரம் அரசாங்கம் வழங்கினால் போதும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]