மீதொட்டமுல்லை அனர்த்தத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்புக்கூற வேண்டும்

மீதொட்டமுல்லை அனர்த்தத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரசாரச் செலாளருமான விஜித ஹேரத் கூறினார்.

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

மீதொட்டமுல்ல அனர்த்தமானது தற்போது தேசியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எனினும், இந்தப் பிரச்சினையின் பாராதூரத்தை இன்னும் இந்த அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. நீண்ட காலமாக நிலவிவரும் இந்தப் பிரச்சினைக்கு இதுவரையிலும் ஆட்சிசெய்த அரசுகள் தற்காலிக தீர்வுகளை முன்வைத்துவந்தனவே ஒழிய, நிரந்தரத் தீர்வொன்று முன்வைக்கப்படாதமையே இந்த அனர்த்தம் இடம்பெறக் காரணமாக அமைந்திருந்தது.

புளுமெண்டல் குப்பைகளை மீதொட்டமுல்லயில் கொட்டும்போதே மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டங்களையும் உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தினார்கள். எனினும், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸாரையும் இராணுவத்தையும் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தி, 2008 ஆம் ஆண்டில் அங்கு குப்பைகளை கொட்டுவித்தார்.

மீதொட்டமுல்லை

உண்மையில், இதன் பின்னணியில் பெரிய மாபியாவே இருக்கின்றது. அரசியல்வாதிகளும் பணம் சம்பாதிக்கும் குழுவினரும் தான் இங்குள்ள குப்பைகளை அகற்றுவதற்குத் தடையாக இருந்துள்ளனர்.

அப்போதே இங்குள்ள குப்பைகளை அகற்ற 180 தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதனால் ஏற்படும் இலாபத்தில் அரசுக்கும் ஒரு பங்கு தருவதாக அவை தெரிவித்துள்ளன. அப்போதே இதனை செய்திருந்தால் இன்று இந்நிலைமை ஏற்பட்டிருக்காது. இதற்கான முழுக்காரணத்தையும் மஹிந்த ராஜபக்ஷ தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]