மீண்டும் ரஜினியோடு இணையவுள்ள பா.ரஞ்சித்

மீண்டும் ரஜினியோடு  இணையவுள்ள பா.ரஞ்சித்

‘அட்டக்கத்தி’, மெட்ராஸ் ஆகிய இரண்டு வெற்றி படங்களை இயக்கி கோலிவுட்டின் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறிய பா.ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தை இயக்கியதன் மூலம் உலக அளவில் பிரபலம் ஆனார். இந்த படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து மீண்டும் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். ‘நீல் புரடொக்சன்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள ரஞ்சித், இந்நிறுவனத்தின் மூலம் முதல் படமாக ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தை தயாரிக்கின்றார். பிரபல இயக்குனர் ராம் அவர்களிடம் உதவியாளராக இருந்த மாரி செல்வராஜ் இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்

‘கிருமி’ புகழ் கதிர் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடிக்கவுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு விரைவில் நடைபெறும்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லையை சேர்ந்த ஒருசிலரும் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.