மீண்டும் முதலமைச்சராக போட்டியிடும் விக்கி!!

வட மாகாண முதலமைச்சரின் நடவடிக்கையினால், வவுனியா பழைய பேருந்து நிலைய வர்த்தகர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதால், இரண்டாவது தடவையாக அவர் முதலமைச்சராக போட்டியிட்டால் வர்த்தகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என முன்னாள் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் இராசரட்ணம் கிரிதரன் தெரிவித்துள்ளார்.

பழைய பேருந்து நிலையப் பகுதிகளில் வியாபாரம் மிகவும் சரிவடைந்துள்ளமை தொடர்பாக தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும்போது,

சித்திரைப் புதாண்டு வியாபார நடவடிக்கை இவ்வருடம் பழைய பேருந்து நிலையப் பகுதிகளில் சரிவடைந்துள்ளது. அத்துடன் வியாபார நிலையங்களில் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடிக்காணப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதம் முதல் புதிய பேருந்து நிலையத்தின் பேருந்து சேவைகள் இடம்பெற்று வருகின்றன. பழைய பேருந்து நிலைய கட்டடத் தொகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் முற்றாக வியாபாரமின்றி பாதிப்படைந்துள்ளன.

இது தொடர்பாக வட மாகாண முதலமைச்சரிடம் பல தடவைகள் வர்த்தகப் பிரமுகர்களினால் எடுத்துரைக்கப்பட்டும், இன்று வரையில் வியாபார நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை முதலமைச்சர் புரிந்து கொள்ளவில்லை.

எமக்கு மாற்றுவழி ஏற்படுத்தி தருவதாக தெரிவித்திருந்தும் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

வவுனியா வர்த்தக சங்கத்தினரும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்களை பல தடவைகள் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்ட போதிலும் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வியாபார நிலையங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லை. பெற்றுக்கொண்ட பொருட்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்தநிலை நீடிக்குமாக இருந்தால் மேலும் பல வியாபார நிலையங்களை இழுத்து மூடவேண்டிய நிலை வர்த்தகர்களுக்கு ஏற்படும்.

எமது வியாபார நிலையங்களின் நடவடிக்கைகள் இவ்வாறு இருக்கும்போது வட மாகாண முதலமைச்சர் மறுபடியும் வட மாகாண முதலமைச்சர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இவரின் இந்நடவடிக்கைக்கு வவுனியா வர்த்தகர்களின் ஆதரவு வழங்க பேருந்து நிலையத்திலுள்ள வர்த்தகர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், இரண்டாவது தடவையும் வட மாகாண முதலமைச்சராக போட்டியிடுவதை வவுனியா மாவட்டத்திலுள்ள வர்த்தகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]