ரேபிஸ் வருமுன் காப்பதே சிறந்தது – மிருக வைத்தியர் அருணி மதுபாஷினி

அருணி மதுபாஷினி

ரேபிஸ் வருமுன் காப்பதே சிறந்தது வளர்ப்புப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் கிராம மக்கள் அக்கறை செலுத்த வேண்டும் பிரதேச மிருக வைத்தியர் அருணி மதுபாஷினி

கிராம மக்கள் தம் வசமுள்ள வளர்ப்புப் பிராணிகளுக்கு ரேபிஸ் எனப்படும் நீர் வெறுப்பு நோய்க் கிருமிக்கெதிரான தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டால் வீணான மனித மற்றும் விலங்கு உயிரிழப்புக்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என கிரான் பிரதேச மிருக வைத்தியர் அருணி மதுபாஷினி உடஹவத்த தெரிவித்தார்.

கிராம மக்களுக்கு தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஊட்டப்பட்டு வருவது தொடர்பாக அவர் வியாழக்கிழமை 15.02.2018 கருத்து வெளியிட்டார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், கிராமங்களில் பொதுவாக செல்லப் பிராணிகளாக நாய்கள் மற்றும் பூனைகளை மக்கள் விரும்பி வளர்க்கிறார்கள்.

ஆயினும், இவை சரியான சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளோடு பராமரிக்கப்படுவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் இந்த வளர்ப்புப் பிராணிகள் ரேபிஸ் எனப்படும் நீர் வெறுப்பு நோய்க் கிருமித் தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்புக்கள் ஏற்படும்.

இதனால் ரேபிஸ் கிருமித் தொற்றுக்குள்ளான வளர்ப்புப் பிராணிகள் விசர் பிடித்து மனிதர்களையும் மற்ற விலங்குகளையும் கடிக்கும் போதும், மனிதர்கள் ரேபிஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்க வேண்டி ஏற்படும்.

ரேபிஸ் தொற்றுக்குள்ளான விலங்குகளிலிருந்து ரேபிஸ் கிருமிகள் மிக விரைவாகப் பலவழிகளில் பரவக் கூடியவை.

ஆகையினால் செல்லப் பிராணிகளையும் வளர்ப்பு மிருகங்களையும் தம் பராமரிப்பில் வைத்திருப்போர் மிருக வைத்தியர் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை அணுகி அவற்றை முறையாகப் பராமரிக்கும் சுகாதார பாதுகாப்பு வழி முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நோய் தொற்றி பின்னர் அவஸ்தைப்படுவதையும், உயிரிழப்புக்களையும் சந்திப்பதை விட வருமுன் காப்பதே மேலானது.

கிரான் மிருக வைத்தியர் பிரிவில் உள்ள சகல கிராமங்களிலும் தற்போது ரேபிஸ் நோய்க்கிருமிக்கெதிரான தடுப்பூசி ஏற்றப்படுவதோடு கிராம மக்களும் விழிப்பூட்டப்பட்டு வருகின்றார்கள்”

கடந்த சில நாட்களில் சந்திவெளிப் பிரதேசத்தில் சுமார் 400 வீட்டு நாய்கள், பூனைகள் என்பன பிடிக்கப்பட்டு ரேபிஸ் நோய்க் கிருமிக்கெதிரான தடுப்பூசிகள் இடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட சந்திவெளிக்‪கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரேபிஸ் எனப்படும் நீர்வெறுப்பு நோய்க் கிருமித் தொற்றுக்குள்ளாகி அலைந்து திரிந்த விசர் நாய், கிராமத்திலுள்ள ஆட்களுக்கும் நாய்களுக்கும் கடித்ததைத் தொடர்ந்து அங்கு நாய் கடித்த ஒரு மூதாட்டி மரணமானதுடன் சிறுமியொருத்தி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]