மின்சார பணியாளர்களின் போராட்டம் இன்று 7வது நாளாகவும்…

தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்காத நிலையில், தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாக, மின்சார சபைப் பணியாளர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இதன்படி அவர்களின் போராட்டம் இன்று 7வது நாளாகவும் தொடரவுள்ளது.

இதுதொடர்பில் நேற்றையதினம் தொழிற்துறை அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனேவிரத்னவுடன், தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், அது தோல்வி அடைந்தது.

இந்த போராட்டத்தின் காரணமாக, ஹப்புதளை, புத்தளம், அம்பாறை உள்ளிட்ட சில பகுதிகளில் மின்விநியோக தடை ஏற்பட்டுள்ளது.

ஆனால் அவற்றில் பெரும்பாலானவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவை என்று, மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறான மின்விநியோகத் தடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.