மிக விரைவில் ரணில் பக்கம் வரவுள்ள மஹிந்த அணியின் முக்கியஸ்தர்- ராஜித சேனாரத்ன அதிரடி தகவல்

பிரபல அரசியல்வாதி ஒருவர் தமது அணியுடன் இணைய தயாராகி வருவதாகவும் அவர், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

களுத்துறை நகரில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

ராஜபக்ஸ – சிறிசேன சதித்திட்டத்திற்கு எதிராக 122 பெரும்பான்மை பலத்தை காட்டியுள்ளோம். வசந்த சேனாநாயக்க மீண்டும் திரும்பியதன் மூலம் அந்த எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.

எம்முடன் இணையவுள்ள பிரபல அரசியல்வாதியுடன் எண்ணிக்கை 124 ஆக உயரும்.

இதற்கு அமைய 130 உறுப்பினர்களின் ஆதரவு எமக்கு கிடைக்கும். மஹிந்த ராஜபக்ஸ அணியினரால் 113 உறுப்பினர்களை அல்ல 85 உறுப்பினர்களின் ஆதரவை காட்டுமாறு சவால் விடுக்கின்றேன்.

85 உறுப்பினர்களின் ஆதரவை காட்டுமாறு கூறும் போது மஹிந்த ராஜபக்ஸ தனது அணியுடன் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் அமர்த்தி விட்டே இந்த போராட்டத்தை கைவிடுவோம். ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றால், 5 நிமிடங்கள் கூட நான் பதவியில் இருக்க போவதில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார். அது சிறந்தது எனவும் ராஜித சேனாரத்ன இதன் போது தெரிவித்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]