மாயக்கல்லி மலைப் பகுதியில் புத்தர் சிலை ; அம்பாறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிகள்

இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லி மலைப் பகுதியில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதைக் கண்டித்தும், அங்கு பௌத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கப்படுகின்ற நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நேற்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடைபெற்றன.

கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, இறக்காமம் உள்ளிட்ட பல முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளில் முஸ்லிம் மக்களும், அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது பல்வேறு கோஷங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஜும்ஆ பள்ளிவாசல்களின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் அவ்வப் பிரதேச செயலகங்கள் வரை சென்று பிரதேச செயலாளர்களிடம் மகஜர்களைக் கையளித்தனர்.

கல்முனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லாஹ், தேசமான்ய ஜௌபர் ஹாஜியார் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றிருந்ததுடன், பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

சாய்ந்தமருது நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் எம்.ஐ. எம்.பிர்தௌஸ், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான ஏ.சி.சமால்தீன், அப்துல் மஜீத், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ.பாவா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். அங்கு உதவிப் பிரதேச செயலாளர் முஹம்மட் றிகாஸிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
அக்கரைப்பற்றில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப்பிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் வழிகாட்டலில் அக்கரைப்பற்று இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில் ஆயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டனர்.
“”முஸ்லிம்களின் காணிகளைப் பறிக்காதே!”, “”இன முறுகலை ஏற்படுத்தாதே!”, “”சமாதானத்தைக் குழப்பும் இனவாதிகளை அடக்கிவை!”, “”முஸ்லிம்களைத் தீண்டாதே!”, “”ஜனாதிபதியே நல்லாட்சி இதுதானா?” என இன்னும் பல்வேறு கோஷங்கள் அடங்கிய வாசகங்களோடு முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அக்கரைப்பற்று பட்டினப் பள்ளிவாசலிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பிரதேச செயலகத்துக்குச் செல்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சிசெய்தபோது அக்கரைப்பற்று பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்ளைத் தடுத்துநிறுத்தினர்.

பொலிஸாரின் இந்தச் செயலுக்கு எதிராகத் திரண்டெழுந்த மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த மோதலைத் தவிர்க்கும் முகமாக அக்கரைப்பற்று பொலிஸாரால் சம்பவ இடத்துக்கு அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் வரவழைக்கப்பட்டார். பிரதேச செயலாளருடன் தமது ஆர்பாட்டத்தின் நோக்கம்பற்றி இளைஞர்கள் தெளிவுபடுத்தினர்.

இதன்போது சமாதானத்துக்குக் குந்தகம் விளைவிப்போருக்கு எதிரான தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதோடு புத்தர் சிலை நிறுவுவதை உடன் தடுத்துநிறுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதேச செயலாளரிடம் முஸ்லிம் மக்கள் கையளித்தனர்.

இதேவேளை, இறக்காமத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நேற்று நடைபெற்றது. நேற்றுக் காலை முதல் இறக்காமம் பிரதேச பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமுகமளிக்கவில்லை. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. வீதிகள் எங்கும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்பட்டிருந்தன. கணிஷமான பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு நோன்பு நோற்றிருந்தமையும் காண முடிந்தது.

மேலும், நேற்று ஜூம்ஆ தொழுகையை அடுத்து இறக்காமம் ஜூம்ஆ பள்ளிவாசல் ஜாமியுல் தையார் பள்ளிவாசல், வரிப்பதான்சேனை ஜூம்ஆப் பள்ளிவாசல் ஆகிய பள்ளிகளில் இருந்து ஒன்று திரண்ட சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அல்லாஹ் அக்பர் என்ற கோஷத்துடன் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டனர்.

“”மாயக்கல்லிக்குப் பாதுகாப்பு நாங்களே!”, “”நீதிமன்றத்தை அவமதிக்காதீர்!”, “”சிங்கள சகோதரர்களே நாட்டுச் சட்டத்திற்கு மதிப்புக் கொடுங்கள்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தாங்கியிருந்தனர்.

3 பள்ளிகளிலுமிருந்தும் இறக்காமம் பிரதான சந்திக்கு வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து பேரணியாக இறக்காமம் பிரதேச செயலகத்துக்குச் சென்று மாயக்கல்லி மலையை மீட்டுத்தருமாறு கோரும் மகஜரை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீரிடம் கையளித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]