மாநகர சபை களப் பணியாளர்கள் நுழைவாயிலை மூடி போராட்டம்

மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடாத்தியோரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும் வரை தமது பணிப்புறக்கணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என கோரிக்கை விடுத்து மட்டக்களப்பு மாநகர சபையின் களப் பணியாளர்கள் மாநகர சபை வாயிலை மூடி போராட்டத்தில் குதித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை 29.01.2019 மட்டக்களப்பு மாநகர முன் வாசலில் அமர்ந்து கொண்ட களப்பணி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தை நடாத்தினர்.

மாநகர சபைக்குள் மாநகர மேயர், உறுப்பினர்கள்,  அலுவலர்கள் எவரையும் உள்ளே நுழைய விடாது மாநகர சபையைப்  பூட்டிவிட்டே போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த போராட்டத்திற்கான காரணம் பற்றி களப்பணி ஊழியர்கள் கூறும்போது திங்கட்கிழமை மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவிலுள்ள நாவற்குடாப் பகுதியில் வீதி திருத்தப் பணிகளில் தமது ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு தர்க்கத்தில் ஈடுபட்ட குடியிருப்பாளர்கள் சிலர் தமது ஊழியர்களைக் கடுமையாகத் தாக்கியதன் விளைவாக தாக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால், இந்த விடயம் குறித்து காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டோரைக் கைது செய்யவில்லை. அதனால் எமக்குப் பாதுகாப்பும் நீதியும் கிடைக்கும் வரை இந்த பணிப்புறக்கணிப்பையும் எதிர்ப்பு கோரிக்கைப் போராட்டத்தையும் துவங்கியுள்ளோம்” என்றனர்.

இது விடயமாக நடவடிக்கை எடுப்பதற்காக  காத்தான்குடிப் பொலிஸார் தாக்குதல் நடாத்தியோரை அடையாளம் காட்டும்படி மாநகர சபை ஊழியர்களைக் கேட்டு அந்நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]