மாணவர் குழுக்களிடையே மோதல்- 28 மாணவர்கள் விசாரிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்ட நிபந்தனையின் அடிப்படையில் பெற்றோரிடம் ஒப்படைப்பு

அம்பாறை – உஹன பிரதேச பாடசாலை ஒன்றின் இரு மாணவ குழுக்களுக்கிடையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 27.11.2018 இடம்பெற்ற மோதலில் 28 பேர் விசாரிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் நிபந்தனையின் அடிப்படையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக உஹன பொலிஸார் தெரிவித்தனர்.

காதல் விவகாரம் ஒன்று சம்பந்தமாகவே மாணவக் குழுக்களுக்கிடையில் இந்த முறுகல் நிலை ஏற்பட்டதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

ஆண்டிறுதிப் பரீட்சைக்கு எழுதிக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர மாணவர்களே பாடசாலையில் இடம்பெறும் தவணை பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் இவ்வாறு மோதலில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்கு விடயம் அறிவிக்கப்பட்டதன் பேரில் பாடசாலைக்கு விரைந்த பொலிஸார் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சுமார் 28 மாணவர்களைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரித்த பின்னர் நிபந்தனையில் பேரில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது ஆண்டிறுதிப் பரீட்சைக் காலம் என்பதாலும் மோதலில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் என்பதாலும் தாம் மாணவர்கள் மீது நீக்குப் போக்குடன் நடந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், பெற்றோர், ஆசிரியர்கள் பாடசாலை நலன் விரும்பிகள், பொதுமக்கள் என சமூகத்தின் அத்தனை தரப்பாரும் மாணவர்களிடையே ஏற்படும் இத்தகைய விரும்பத் தகாத சம்பவங்கள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் பொலிஸார் வேண்டிக் கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]