மாணவர்களுக்கு மதிய உணவு….

பின்தங்கிய மாவட்டங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. திட்டத்திற்கென 5 ஆயிரத்து 185 மில்லியன் ரூபா நிதி கல்வியமைச்சினூடாக ஒதுக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஸ்னன் தெரிவித்தார். நேற்றைய தினம் கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போதே அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த சந்திப்பில் கல்வியமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இவ்வருடத்தில் பின்தங்கிய மாவட்டங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் பசும்பால் வழங்கும் வேலைத்திட்டத்திற்கென குறித்த நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் பாடசாலைகளை மாத்திரம் அபிவிருத்தி செய்வது குறித்து கவனம் செலுத்தாது, மாணவர்களின் சுகாதார நலன் தொடர்பிலும் கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறது. மாணவர்கள் கல்வியில் மிளிர வேண்டுமாயின் அவர்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக காணப்பட வேண்டுமென்ற அடிப்படையிலேயே அது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஸ்னன் மேலும் தெரிவித்தார்.