மாணவர்களிடம் பணம் அறவிட முடியாது

பணம்

“கல்வி அமைச்சின் மூலமாக பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற சுரக்ஷா காப்புறுதி திட்டத்திற்கு பணம் அறவிடுவது சட்டப்படி குற்றமாகும் அவ்வாறு பணம் கேட்கின்ற ஆசிரியர்கள் அதிபர்கள் தொடர்பாக தனது அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களை பதிவு செய்கின்றபோது, ஒரு சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பணம் அறவிடுவதாக தனக்கு பெற்றோர்களால் புகார் தெரிவிக்கப்பட்டுள்தாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கல்வி அமைச்சு பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி இலவச காப்புறுதி திட்டம் ஒன்றை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.இந்த காப்புறுதி திட்டமானது சுரக்ஷா எனும் திட்டத்தின் மூலமாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது.

இந்த காப்புறுதி திட்டத்தின் மூலமாக மாணவர்களுக்கு இரண்டு இலட்ச ரூபா வரை காப்புறுதிகளை பெற்றுக் கொள்ள முடியும்.அதற்காக அனைத்து மாணவர்களும் தங்களை தங்களுடைய பாடசாலைகளில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதற்காக எந்த ஒரு கட்டணத்தையும் பாடசாலையில் அதிபர்களோ ஆசிரியர்களோ அறவிட முடியாது.இலவசமாக பதிவு செய்து கொள்வதன் மூலம் இந்த திட்டத்தில் மாணவர்களை இணைத்துக் கொள்ள முடியும்.

மாணவர்களுக்கு ஏற்படுகின்ற சுகவீனம் விபத்துகள் மற்று ஏனைய மருத்துவம் தொடர்பான பிரச்சினைகளின் பொழுது அவர்கள் இந்த திட்டத்தின் மூலமாக பயன்களை பெற்றுக் கொள்ள முடியும்.இதன் மூலம் பெற்றோர்களுக்கு பாரிய சுமயை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

மாணவர்கள் தங்களுடைய 13 வருட கல்வியை தொடர வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டத்தினை அரசாங்கம் நடைமுறைபடுத்தி வருகின்றது.இதன் மூலமாக பெற்றோர்கள் பலன்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.எனவே இந்த திட்டமானது முழுமையாக இலவசமாகவே வழங்கப்படுகின்றது.

இதற்காக பாடசாலைகளில் எந்த காரணம் கொண்டும் பணம் அறவிட முடியாது.அப்படி பாடசாலைகளில் பணம் அறவிடப்பட்டால் அது தொடர்பாக என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரும் சந்தர்ப்பத்தில் குறித்த அதிபர்கள் ஆசிரியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என, அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]