மாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்பு’ பெரும் சவாலாக அமைந்துள்ளது – வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் தெரிவிப்பு

தற்போதைய இயந்திரமய ஓட்டத்தில் மாணவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், சுயமான கற்றலுக்கும் ‘பிரத்தியேக வகுப்புக்கள்’ எனும் புகுத்தப்பட்ட கல்விக் கலாச்சாரம் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உப வேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் தெரிவித்தார்.

சமகாலக் கல்விப்புல செயற்பாடுகளில் கரிசனை கொள்ள வேண்டிய விழிப்புணர்வு தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை 16.10.2018 விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பொதுவாக தற்போதைய பரபரப்பான சூழலோடு அமைந்த இயந்திர வாழ்க்கை ஓட்டத்தில் கல்வியையும் அசுரவேகத்தில் பெற்றுக் கொள்ளவே அவாவுறுகின்றோம்.அதனடிப்படையிலேயே பிரத்தியேக வகுப்புக்கள் என்ற புகுத்தப்பட்ட கல்விக் கலாச்சாரம் மாணவர்களிடையேயுள்ள குறை அறிவினை நிறைவுறுத்தும் நோக்கத்துடனே ஏற்படுத்தப்பட்டன.

ஆயினும், இன்றைய காலத்தில் இவ்வகுப்புக்கள் ஒவ்வொரு பிள்ளையினதும் பெறுமதிமிக்க சுயவிருத்தியில் அபரிமித தாக்கத்தினை ஏற்படுத்திருப்பது புலனாகின்றது.மாணவர்களது உடல் கட்டமைப்பு விருத்தியிலும் இந்த ஓய்வற்ற ஓட்டம் தாக்கத்தினை ஏற்படுத்தி பிற்காலத்தில் நோயாளியாகவும் உருவாக்கும் அபாயகரமமிக்க நிலையை ஏற்படுத்தக் காரணமாகின்றன என்பதும் அறிவியல் ரீதியாக கவனத்திற்கொள்ளப்பட வேண்டும்.

இந்நிலை எமது இளம் சந்ததியினரில் ஏற்படுத்தும் அபாயகர நிலைத்தாக்கங்களை இன்று கண்கூடாகக் காண்கின்றோம். அதிலொருவகை விளைவுதான் பிள்ளைகள் மத்தியிலே மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலையும் விபத்து மரணங்களும் அதிகரித்திருக்கிறது.இதற்கும் மேலதிகமாக தொற்றா நோய்களான நீரிழிவு போன்றனவும் அதிகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

ஆகவே எமது எதிர்கால சந்ததியினரின் சுக சேம நலனைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பு பெற்றோர், பாதுகாவலர், கல்விப் புலம் சார்ந்தோர் உட்பட ஒட்டு மொத்த சமூகத்திடமும் உள்ளது. வாழ்க்கையானது எதிர்பார்ப்புக்களால் நிறைந்ததாகவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அதற்காக இளம்பராயத்தினரின் வளர்ச்சிப்பாதையில் தியாகங்கள் தவிர்க்கமுடியாதவை.

ஆயினும், அநாவசிய நெருக்கடி ஓட்டத்தைத் தவிர்த்து ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதே மேலான தெரிவாகக் கொள்ளப்பட வேண்டும்.பாடசாலையில் மாணவர்களாகிய எமது இளம் தலைமுறையினரை தரம்மிக்க பிரசைகளாக்கும் பொறுப்பினை கல்வியினூடாக எடுக்க வேண்டும். கற்றல் – கற்பித்தல் முறையில் அறிவுப் புலம், ஆற்றல் புலம், நடத்தைப் புலம் ஆகிய மூன்று புலங்கள் உள்ளன.

இதற்கும் மேலதிகமாக மாணவர்கள் கல்வியின் உச்ச அறிவுப் பயனைப் பெறுவதற்கு கற்பிக்கும் ஆசிரியர்களிடம் சிறந்த “மனப்பாங்கு”ம் இருப்பது அவசியமாகும்.

ஆகவே, இவற்றை சிறந்த முறையில் உள்வாங்கிக் கொண்டு பாடசாலை ஆசிரியர்கள் தம்மிடம் கற்கும் மாணவர்களை அணுகினால் ரியுசன் எனப்படும் புதிய கல்விக் கலாச்சார இயந்திர மய நெருக்கடி மிக்க வாழ்க்கை ஓட்டத்தைத் தவிர்க்க முடியும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]