மாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 17 இன்று வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

டுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் தொடர்பில் நடக்கும் விசாரணைகள் குறித்தான இடைக்கால அறிக்கை ஒன்றை டுபாய் பாதுகாப்பு தரப்பு கொழும்புக்கு அனுப்பியிருக்கிறது.

அதேசமயம் இந்த தரப்பினருடன் தொடர்புகளை வைத்திருந்த அரசியல்வாதிகள் பலர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். பலர் இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் உதவியை நாடியுள்ளனர். அவர்களின் ஊடாக அரசின் மேல்மட்டத்திற்கு அழுத்தங்களை வழங்குவதே அதன் நோக்கம். ஆனால் அந்த தூதரகங்கள் இந்த விவகாரத்தில் தலையிடாதிருக்க தீர்மானித்துள்ளன.

மலையகத்தின் ஒரு முக்கிய கட்சியொன்றின் தலைவர் ( தமிழ் முற்போக்கு கூட்டணி அல்ல )குறித்து விபரங்களை வெளியிட்டிருந்தேன். அவருக்கு போதைப்பொருள் வழங்குவோர் விபரங்கள் குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்திருப்பதாகவும் அவர்களின் கடந்த கால செயற்பாடுகள் தேடப்படுவதாகவும் அறியமுடிகின்றது.

குறிப்பிட்ட அரசியல்வாதியின் பாதுகாப்பு தரப்பினரிடம் இரகசிய விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன்போது அவரை சூழவுள்ள நட்புக்களின் விபரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் பல்வேறு சமயங்களில் பாதுகாப்பு தரப்பினர் இன்றி தனிப்பட்ட பயணங்களை மேற்கொண்டு அந்த தலைவர் சென்று வந்த இடங்கள் குறித்தும் தேடப்படுகின்றன.

புதிய தகவல்கள் !

மதுஷ் தொடர்பில் இங்கு விசாரணை செய்து வரும் பொலிஸாருக்கு அதிர்ச்சித் தகவல்கள் பல கிடைத்திருக்கின்றன.

இலங்கையில் படைத்தரப்பினரிடம் இல்லாத நவீனரக ஆயுதங்களை கொள்வனவு செய்ய மதுஷ் வைத்திருந்த திட்டமே கசிந்துள்ளது.

மதுஷின் சகாவான மிரிஸ்ஸ சுத்தாவுக்கு ஆயுதங்களை வழங்கிய ஒரு சிப்பாய் கைது செய்யப்பட்டாரல்லவா ? அவரிடம் இருந்து சில ஆவணங்கள் மீட்கப்பட்டன. அதில் இருந்து கிடைத்த துப்பை வைத்து விசாரணை செய்த போதே பொலிஸாருக்கு இந்த விபரம் கிடைத்துள்ளது.

அமெரிக்க இராணுவத்தினர் பயன்படுத்தும் அதுவும் ஒரு அவசர நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் எம் 39 நவீன துப்பாக்கிகளை கொள்வனவு செய்து அவற்றை இலங்கைக்கு அனுப்புவதற்காக மதுஷ் தரப்பு ஆயுத விற்பனை முகவர்களிடம் பேச்சு நடத்தியுள்ளது.

அவற்றை வாங்க பூர்வாங்க பேச்சுக்கள் நடந்து முடிந்து கொள்வனவு செய்ய தயாராகி இருந்த நிலையில் தான் மதுஷ் மற்றும் ரீம் கைது செய்யப்பட்டுள்ளது. அந்த துப்பாக்கியின் மாதிரி படம் ஒன்றை இணைத்துள்ளேன்.

இந்த நவீன துப்பாக்கிகள் கொலை கொள்ளைகளுக்கு பயன்படுத்தவா அல்லது முக்கிய பிரமுகர்கள் எவரையும் இலக்கு வைக்கவா வாங்கப்படவிருந்தன என்பது பற்றியும் ஆராயப்படுகிறது.

இரத்தினக்கல் எங்கே?

பன்னிப்பிட்டியவில் கொள்ளையடிக்கப்பட்ட இரத்தினக்கல் டுபாய் கொண்டு செல்லப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. ஆனால் அது எங்கே வைக்கப்பட்டுள்ளது என்று தேடிப்பார்த்ததில் வங்கி பாதுகாப்பு பெட்டகம் ஒன்றில் வைக்கப்பட்டிருக்கலாமென தகவல் கிடைத்துள்ளது. அதனை மீட்க நீதிமன்றின் உத்தரவு தேவை.

இந்த இரத்தினக்கல் இலங்கையில் இருந்து எப்படி கொண்டு செல்லப்பட்டது என்பதை தேடிப்பார்த்த போது அதற்கு பெரிதும் உதவிய சுங்க அதிகாரி ஒருவர் இதில் சம்பந்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. அவரின் ஹிஸ்ட்ரியையும் தேடுகிறது சி ஐ டி..

இரத்தினக்கல் கொள்ளைக்கு ஆயுதம் வழங்கிய வெடிக்கந்த கசுன் கைது செய்யப்பட்டாரல்லவா..? அவரின் தொலைபேசியை சோதனையிட்ட பொலிஸ் பலரின் படங்களை அதில் இருந்து தரவிறக்கம் செய்தது. மதுஷின் தொலைபேசியில் இருந்து வந்த படங்கள் பலவற்றில் மேற்சொல்லப்பட்ட சுங்க அதிகாரியின் படமும் உள்ளதாக தகவல். விமான நிலைய சுங்க அதிகாரியான இவர் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளார்.

வெளிநாடுகளுக்கு பாய்ந்த பலர்…!

மதுஷின் கைதையடுத்து இலங்கையில் உள்ள பலரும் – அவரின் சகாக்களான மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பலரும் தமைமறைவாகிவிட்டதாக பொலிஸ் சொல்கிறது.

இப்போது மதுஷ் பெயரை பயன்படுத்தி பாதாள உலகத்தின் அடுத்த தலைவர் பதவிக்கு வர பலர் முயற்சிப்பதாக தகவல்.

இதற்கிடையில் நேற்றுமுன்தினம் கொழும்பில் கைதுசெய்யப்பட்ட கெசெல்வத்த தினுக்கவின் மாமா (மனைவியின் தந்தை ) கொழும்பில் பல வர்த்தகர்களிடம் இருந்து கப்பமாக பணம் கோரியதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது…கெசல்வத்த தினுக்க டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

இவற்றையெல்லாம் விட -இந்தியாவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அங்கொட லொக்கா மற்றும் லடியா ஆகியோர் இந்தியாவில் இருந்து டுபாய் வந்தது எப்படி ? இலங்கை மற்றும் தமிழக தமிழ் அரசியல்வாதிகள் உதவினார்களா?

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]