மாகாண சபைத் தேர்தல் சட்டமூலம் அரசமைப்புக்கு முரணானது அல்ல! சபாநாயகர் அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தல்கள் சட்டமூலம் அரசமைப்புக்கு முரணானது அல்ல என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என சபாநாயகர் கருஜயசூரிய நேற்று நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு வேளையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அரசமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் ‘மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்)’ எனும் சட்டமூலத்துக்கு எதிராக ஆற்றுப்படுத்தப்பட்ட மனு சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாடாளுமன்றத்துக்கு அறிவிக்க விரும்புகின்றேன்.

மனுதாரர் இந்தச் சட்டமூலம் தொடர்பான மனுவைத் தொடர்ந்து முன்னெடுக்க விரும்பவில்லையென நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தச் சட்டமூலம் அரசமைப்பின் ஏற்பாடுகளுக்கு முரணானது அல்ல எனவும், அரசமைப்பின் 12(4) அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ள சமத்துவத்துக்கான உரிமை ஏற்பாடுகளுக்கு ஆதரவளிக்கின்றது எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது” என்று சபாநாயகர் தெரிவித்தார்.