மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிக்கும் ஜனநாயக விரோதப் போக்கை அரசு கைவிட வேண்டும்- நஸீர் அஹமத்!!

மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிக்கும் ஜனநாயக விரோதப் போக்கை அரசு தொடர்ந்தால் எப்போதாவது தேர்தல் நடத்தப்படும்பட்சத்தில் அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசின் ஜனநாயக விரோதப் போக்கு தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை 20.05.2018 அறிக்கையொன்றை வெளிட்டார், அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உள்ளுராட்சி சபைகள், மற்றும் மாகாண சபைகள் கலைக்கப்படும் பொழுது அல்லது அவற்றின் ஆட்சி முடிவுறுத்தாப்படும்பொழுது ஜனநாயகத்தை மீண்டும் நிலை நிறுத்தி மக்களாட்சியை அனுமதிப்பதற்காக தேர்தல்கள் நடத்தப்படுவதன் கால எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இது முறைப்படி அமுல்படுத்தப்பட்டால் சிவில் சமூகம் ஆட்சியின் பங்காளர்களாவும் அபிவிருத்தியின் பங்காளர்களாகவும் மாறுவார்கள். அப்பொழுது சீர்குலைவுகள் இடம்பெற ஒருபோதும் வழியேற்படாது.
2012இல் ஆட்சியைப் பொறுப்பேற்ற கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளின் ஆட்சி கடந்த செப்டம்பர் 2017ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

அவ்வாறு மாகாண சபைகளின் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட அந்தத் தினத்திலிருந்து ஒரு வாரத்திற்குள் மாகாண சபை தேர்தல் சட்டத்தின் விதிகள் (1988 ஃ 02) படி தேர்தல்கள் ஆணையாளர் (இப்பொழுது தேர்தல்கள் ஆணைக்குழு) அடுத்த தேர்தலை நடாத்துவதற்கான பொது அறிவித்தலை வெளியிட வேண்டும்.
அந்த அறிவிப்பு வெளியாகி 14 நாளிலிருந்து 21ஆம் நாளில் தேர்தலுக்கான வேட்பு மனுக் காலம் முடிவடைய வேண்டும்.

அதிலிருந்து ஐந்து வாரங்களுக்குக் குறையாமலும் 8 வாரங்களுக்கு மேற்படாமலும் வாக்கெடுப்பு தேதி அறிவிப்புச் செய்யப்பட்டு தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும்.
ஆனால், கடந்த வருடம் செப்ரெம்பெர் மாதம் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடாத்துவதற்கு அரசு எந்தவித பிரயத்தனங்களையும் மேற்கொள்ளவில்லை.

நாட்டில் இதனை விட பாரதூரமான ஜனநாயக மறுப்பு வேறென்ன இருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் மாகாண சபைகளை வைத்திரப்பதால் ஒரு போதும் ஜனநாயகம் மேலோங்கப் போவதில்லை.

மாறாக தனி நபர் ஆதிக்கமும் முறைகேடுகளும் சீர்குலைவுகளும் ஏற்படவே இத்தகைய ஜனநாயக மறுப்புக்கள் வழி செய்யும்.
எனவே, ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளித்து அரசு மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்த முன்வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாகாண சபைத் தேர்தல்களை அரசு இழுத்தடித்துச் சென்றால் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சந்தித்த தோல்வியை விட பாரிய தோல்வியை அரசு சந்திக்கும்.

நல்லாட்சிக்கு அதுவொரு சாவுமணியாகவும் இருக்கும்.
ஏற்கெனவே, நல்லாட்சி அரசு தூரநோக்கின்றியும், கொள்கை வகுப்புக்கள் இன்றியும், சரியான திட்டமிடல்கள் இன்றியும் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.
இது மக்கள் இந்த அரசு மீது வைத்திருந்த எதிர்பார்ப்பை மழுங்கடிக்கச் செய்து விட்டது.

நல்லாட்சி அரசிடம் நிலைபேறான திட்டங்கள் எதுவுமில்லாதது ஒரு புறமிருக்க இருக்கும் நல்ல பல யோசனைகளையும் முன்கொண்டு செல்ல முடியாமல் தானும் குழம்பி மக்களையும் குழப்பும் கட்டத்திற்கு அரசு தடுமாறிக்கொண்டிருக்கிறது” என்று அவ்விறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]