மாகாணசபைத் தேர்தலைத் தள்ளிப்போடும் திரைமறைவு முயற்சிகள் இடம்பெறுகின்றன- நஸீர் அஹமட் காட்டம்

மாகாணசபைத் தேர்தலைத் தள்ளிப்போடும் திரைமறைவு முயற்சிகள் இடம்பெற்று வருவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் காட்டமாகக் கருத்து வெளியிட்டார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை 27.12.2018 அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனநாயகத்தைக் காப்பாற்றிவிட்டோம் – நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது எனக் கொக்கரிப்பவர்கள் மக்களின் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடச் செய்யும் திரைமறைவு முயற்சிகளை மேற்கொள்ள முனைகின்றனர்.

இதனொரு அம்சமே சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என்ற அரசின் அறிவிப்பாகும்.

மாகாண சபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்த அரசு தீர்மானித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் நல்;லாட்சி அரசு என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஆட்சியில் எப்படி தேர்தல்கள் தள்ளிப் போடப்பட்டு வந்தனவோ அதே பாணியில் புதிய அரசும் செயற்பட முன்வந்;துள்ளதா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஆறு மாகாண சபைகள் கலைக்கப்பட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் வகையில் தேர்தல் பின்போடப்பட்டுள்ளது.

மேலும் மூன்று மாகாண சபைகளில் ஆட்சிக் காலம் அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை உள்ளது.

எனவே, உடனடியாக அந்த மூன்று சபைகளின் ஆட்சியையும் கலைக்க முடியாது. அப்படி செய்வது ஜனநாயக விரோதம் என்றே பொருள் கொள்ளப்படும்.

இந்நிலையில் எல்லா சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது நிச்சயமாக காலதாமதம் செய்வதற்கான ஒரு வழிமுறையாகவே பார்க்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் ஜனநாயகம் பற்றி பெரும் குரல் எழுப்பும் அரசின் தார்மீகம் என்னவென்பது புரியாது உள்ளது.

எனவே, கலைக்கப்பட்டுள்ள ஆறு மாகாண சபைகளுக்குமான தேர்தலை காலதாமதமின்றி நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறும்பட்சத்தில் மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை வெற்றெடுப்பதற்கான போராட்டத்தில் சகல வழிகளை நாடவும் அவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இவ்வேளையில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்

மேலும் எல்லை நிர்ணயம், பெண்களுக்களுக்கான பிரதிநிதித்துவம் போன்ற விடயங்களையும் கையிலேடுத்துக்கொண்டு பொய்யான காரணிகளை முன்வைத்து தேர்தலை தள்ளிப்போட அரசு முயற்சிக்கக் கூடாது.” என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]