மஹிந்த பிரதமராக பதவியேற்றது தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேல்- கொதித்தெழுந்த வைகோ

ஈழத் தமிழர்களின் இனப் படுகொலையை திட்டமிட்டு நடத்திய மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றது தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேல் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இலங்கைத் தீவில் மிகக் கொடூரமான ஈழத் தமிழ் இனப் படுகொலையைத் திட்டமிட்டு ஈவு இரக்கமின்றி நடத்திய கொடிய குற்றவாளி ஜனாதிபதி பொறுப்பில் இருந்த மகிந்த ராஜபக்ச என்பதை ஐ.நா மன்றத்தின் பொதுச் செயலாளர் 2010 நியமித்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான குழுவின் ஆய்வு அறிக்கை உலகத்துக்கு அம்பலப்படுத்தியது.

குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டனர். ஹிட்லரின் நாஜிகள் இரண்டாம் உலகப் போரின் போது நடத்திய படுகொலைகளுக்குப் பின்னர் ராஜபக்ச அரசு நடத்திய இனப்படு கொலையில் கர்ப்பிணித் தாய்மார்களும் கொல்லப்பட்டனர்.

எண்ணற்ற தமிழ்ப் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அதிகளவிலான இளைஞர்கள் சித்திரவதை செய்து அழிக்கப்பட்டனர்.

இந்த இனப்படு கொலையை இலங்கை ஜனாதிபதி பொறுப்பில் இருந்த ராஜபக்ச நடத்திய போது, அதனைச் செயற்படுத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர் தான் மைத்திரிபால சிறிசேன ஆவார். இருவருமே தமிழ் இனக்கொலையின் கூட்டுக் குற்றவாளிகள் ஆவார்கள்.

2015 தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து ஒரு நாடகம் நடத்தினார். ஈழத் தமிழ் இனத்தையே கருவறுத்துப் பூண்டோடு அழித்துவிட வேண்டும் என்ற வன்மம் கொண்டவர்தான் ராஜபக்சே என்பதை மானத் தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

இலங்கை அரசியலில் நடைபெறுகிற சதுரங்கப் போட்டியில், சிங்கள அரசியல்வாதிகள் அனைவருமே ஈழத் தமிழ் இனத்தின் தனித் தன்மையை அழிக்கும் குறிக்கோளைக் கொண்டவர்கள் தாம்.

மாலைத்தீவு தேர்தலில் நடைபெற்ற அதிகார மாற்றத்தால் ஆத்திரமடைந்த சீனா, இலங்கையில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக ஏற்கனவே அம்மன்தோட்டா துறைமுகத்தைப் பெற்றதோடு, மீண்டும் ராஜபக்ச கைகளில் அதிகாரம் வரவேண்டும் என்று திட்டமிட்டுக்காய் நகர்த்துகிறது.

தமிழ் இனக் கொலையாளி ராஜபக்ச இந்தியாவுக்கு வந்து, பிரதமர் மோடியைச் சந்தித்ததும், மூன்று நாட்கள் டெல்லியில் முகாமிட்டதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

இலங்கை அரசியல் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தத்தின் படி, ராஜபக்ச நியமனம் செல்லாது என்றும், தானே பிரதமர் என்றும் ரணில் விக்கிரமசிங்கே கூறி இருக்கிறார்.

எது எப்படி இருப்பிலும் சிங்களர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் தமிழ் இன அழிப்பையே நோக்கமாகக் கொண்டவர்கள் என்பதும், தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதும் உண்மையாகும்.

இந்தியாவில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நரேந்திர மோடி அரசு தொடக்கத்தில் இருந்தே மனித உரிமைக் கவுன்சிலிலும், ஈழத் தமிழர்கள் குறித்த அனைத்துப் பிரச்சினைகளிலும் சிங்கள அரசுக்கு ஆதரவாகவே நடந்து வருகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]