மஹிந்த அணியினர் பல கோடி ரூபாக்களைப் பேரம் பேசி எம்மை வளைத்தெடுக்கவே முடியாது- ரிஷாத் அணி பகிரங்க அறிவிப்பு

“ரணில் விக்கிரமசிங்கவேதான் அரசமைப்பின்படி நாட்டின் பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிக்கின்றார். இதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. அவரின் கைகளை நாங்கள் ஓரணியில் நின்று தொடர்ந்து பலப்படுத்துவோம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் காட்டும் சந்தர்ப்பத்திலும் அவருக்கே நாங்கள் ஆதரவு வழங்குவோம். மஹிந்த அணியினர் பல கோடி ரூபாக்களைப் பேரம் பேசி எம்மை வளைத்தெடுக்கவே முடியாது. இது ஜனநாயக நாடு. சர்வாதிகார நாடு அல்ல. எங்களை நம்பி வாக்களித்து எங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த மக்களுக்கு நாம் ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டோம்.”

– இவ்வாறு ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர் இன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஓரணியில் நின்று சூளுரைத்தனர்.

நாடாளுமன்றக் குழு அறையில் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று முற்பகல் விசேட கூட்டம் ஒன்றை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 5 எம்.பிக்களும் தங்கள் நிலைப்பாட்டை வெளியில் வந்து ஊடகவியலாளர்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]