மஹிந்தவின் குடியுரிமையை பறிக்க வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் மட்டும் போதாது, கருத்து வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா இதனை நேற்று தெரிவித்துள்ளார்.

முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள், ஊழல்கள், அதிகாரமீறல்கள் குறித்து விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்குமாறும், அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவரது குடியியல் உரிமைகளைப் பறிக்குமாறும் பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, “நாட்டின் குடிமகன் ஒருவரது குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் கருத்து வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும்.

குடியியல் உரிமைகளை இழப்பது என்பது, ஒருவர் தேர்தலில் வாக்களிப்பதற்கான உரிமையை பறிப்பதாகும். ஆனால் அரசியலமைப்பில் ஒவ்வொருவரினதும் வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,

எனவே, கருத்து வாக்கெடுப்பை நடத்தாமலோ, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறாமலோ ஒருவரின் குடியுரிமையைப் பறிப்பது சட்ட விரோதமானது” என்றும் அவர் கூறியுள்ளார்.