மஹிந்தவா? ரணிலா பிரதமர் என்பதை நாளை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்தே ஊகிக்க முடியும்??

நாடாளுமன்றத்தை கூட்ட வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாளை சபாநாயகர் விசேட சந்திப்பை நடத்தவுள்ளார். நாளை காலை இந்த சந்திப்பு நடக்கிறது.நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் உள்ள குழு அறையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இம்மாதம் 16ம் திகதி வரை நாடாளுமன்றத்தை இடைநிறுத்தியுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மையை பெறுவதற்கு குதிரை பேரத்தை முடிக்க வசதியாக இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

ஜனாதிபதியின் இந்த முடிவிற்கு எதிராக சபாநாயகர் கரு ஜயசூரிய போர்க்கொடி உயர்த்தினார். அதைத் தொடர்ந்து ஐ.தே.க, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 125 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, நாடாளுமன்றத்தை கூட்டும்படி வலியுறுத்தும் கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்தனர்.

இதன்பின்னர் நேற்று ஜனாதிபதியை சந்தித்து சபாநாயகர் கலந்துரையாடினார். வரும் 5ம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், நாளை காலை நாடாளுமன்றத்தில் குழு அறையில் சபாநாயகர் தலைமையில் கூட்டம் இடம்பெறுகிறது. நாடாளுமன்றத்தை கூட்டும்படி வலியுறுத்தி கையொப்பமிட்ட 125 உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் முடக்கப்பட்டது, பிரதமர் பதவி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் இதுவரையான நிலைமை, நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு இதுவரை தான் எடுத்த முயற்சிகள், நடந்த பேச்சு விபரங்களை பற்றி சபாநாயகர் இந்த கூட்டத்தில் உறுப்பினர்களிற்கு விளக்கமளிக்கவுள்ளார்.

113 உறுப்பினர்களின் ஆதரவு தமக்கிருப்பதாக இரண்டு தரப்பும் கூறி வருகின்றன. இன்றைய தினமும் ஐ.தே.க, சு.க இரண்டும் தமக்கே பெரும்பான்மையிருப்பதாக உரிமை கோரியிருந்தன. எனினும், இன்று மாலை நிலவரத்தின்படி மஹிந்த ராஜபக்ச 113 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளைய தினம் சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கவனித்தால், நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மையை நிரூபிப்பாரா என்பதை ஓரளவு ஊகிக்க முடியும் என கருதப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]