மலையகத்தில் 3000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள தீர்மானம் : இராதாகிருஷ்ணன் நடவடிக்கை

மலையக பட்டதாரிகளை உருவாக்குவதற்காக அரசு அவர்களுக்கு கடன் அடிப்படையில் நிதியை வழங்க முன்வந்துள்ளது. அதன்மூலம் அவர்கள் தனியார் நிறுவனங்கள் ஊடாகவும் தமது பட்டப்படிப்பை நிறைவு செய்யமுடியும். அதேநேரம் அவர்கள் பெருந்தோட்ட பாடசலைகளில் தமது கடமையை தொடர்ந்தால் வழங்கப்படுகின்ற கடன் தொகையை ரத்துசெய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தச் செயற்திட்டமானது எனது வேண்டுகோளுக்கு இணங்கவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவின் பணிப்புரையின் பேரிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று கல்வி அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ங

அவர் மேலும் கூறியதாவது,

எனது வேண்டுகோளுக்கு இணங்க 3000 பெருந்தோட்ட ஆசிரியர்களை உள்வாங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.அதற்கான முதலாவது கூட்டமே இன்று நடைபெறுகின்றது.இந்த கூட்டத்தில் இது தொடர்பான வர்த்தமாணி அறிவித்தலை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஊடாக மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியர் நியமனமானது மிகவும் திறமையானவர்களை உள்வாங்குவதே முதலாவது நோக்கமாகும். இதற்காக வெளியிடப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தலில் கடந்த காலங்களில் ஆசிரியர்களை உள்வாங்குவது தொடர்பான வர்த்தமானிகளில் விடப்பட்ட தவறுகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தி அவற்றை நிவர்த்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

மேலும் பாடசாலைகளை மையப்படுத்தியதாகவே இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது.இதற்காக மாகாணங்களில் நிலவும் ஆசிரியர்கள் குறைப்பாடுகள் தொடர்பாக அனைத்து விபரங்களும் திரட்டப்படவுள்ளது.அதற்கு அமைய எந்தெந்த மாகாணங்களுக்கு எவ்வளவு ஆசிரியர்கள் எந்த பாடசாலைகளுக்கு தேவையோ அதற்கு அமையவே விண்ணப்பங்களும் கோரப்படவுள்ளது.

இந்த ஆசிரியர்களுக்கு அரசின் மூலமாக அவர்களுடைய பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு வங்கிக் கடன்கள் வழங்கப்படும்.அதன் மூலமாக அவர்கள் தங்களுடைய பட்டப்படிப்பை தனியார் நிறுவனங்கள் ஊடாகவும் நிறைவு செய்துகொள்ள முடியும். அதனைத் தொடர்ந்து அவர்கள் பெருந்தோட்ட பகுதிகளில் கடமையாற்றினால் அவர்களுக்காக வழங்கப்பட்ட கடன் தொகை ரத்துசெய்யப்படும்.அப்படி இல்லாவிட்டால் அவர்கள் அந்த கடன் தொகையை மீண்டும் செலுத்த வேண்டும்.

இந்தத் திடத்தின் மூலமாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை முழுமையாக நிவர்த்தி செய்ய முடியுமென எதிர்பார்க்கின்றேன்.எங்களுடைய இந்த காலகட்டத்தில் மலையக கல்வி உட்பட வடகிழக்கு தமிழ் கல்வியை உயர்வடைய செய்ய வேண்டும் என்பதே எனது இலக்காக இருக்கின்றது.

அதற்காக எமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றார்.மேலும் அவர் கல்வி அமைச்சராக இருந்த காரணத்தால் அவருக்கு இந்த விடயம் தொடர்பாக அனைத்து விடயங்களும் தெளிவாக தெரியும். மேலும் இந்த கல்வித்துறையை அபிவிருத்தி செய்வதற்கு அவருக்கு மிகுந்த அக்கறை இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]