மலையகத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தொண்டமானே முன்னின்று செயற்பட்பார் : ரமேஸ்வரன்

மலையகத்தில் 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திச் செய்யும் முகமாக அன்று அரசுடன் பேரம்பேசி 3179 ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக்கொடுத்த பெருமை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானையே சாரும் என மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதப்பாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

ஒரு காலகட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து மலையகத்திற்கு வந்திருந்த ஆசிரியர்களிடம் நாம் கல்விக் கற்றோம். அவர்கள் எம்மீது அக்கரையுடன் செயற்பட்டதன் காரணமாகவே நாம் இன்று சமூகத்தில் கல்விக் கற்று நல்ல நிலையில் வாழ முடிகிறது. இன்றைய காலகட்டத்தில் அவ்வாறான நிலைமை இல்லை. அனைத்தும் மாறிவிட்டன.

இன்று எமது சமூகத்தை சேர்ந்தவர்களே ஆசிரயர்களாகவும் அதிபர்களாகவும் தொழில் புரிகின்றார்கள். இவர்களின் 100 வீத அர்ப்பணிப்பு காரணமாகவே மலையகத்தில் கல்வியில் முன்னேற்றம் காணப்படுகின்றது.மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைகின்றார்கள். பாடசாலைகளில் கல்விப் பெறுபேறுகளைப் பார்க்கும்போது வியக்கத்தக்கதாக இருக்கின்றது.

அன்று எம்மிடம் இருந்தது ஆசிரியர் தொழில் மட்டுமே. 1982ஆம் 1983ஆம் ஆண்டுகளில் சௌமிய மூர்த்தி தொண்டமானால் 500 ஆசிரியர் நியமனங்கள் மலையகத்திற்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டது. அதில் 402 நியமனங்கள் கணிதப் பாடம் சித்தியடையாதவர்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதில் பெரும்பாலானோர் இன்று ஓய்வுபெற்றுவிட்டனர்.அதன்பிறகு பல்வேறு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இருந்தும் அக்காலகட்டத்தில் எமது சமூகத்தில் கல்விக் கற்றவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களாகவே காணப்பட்டனர். அன்று எமது சமூகத்தின் மத்தியில் ஒரு போட்டி நிலை உருவாகவில்லை அந்த நிலை தற்போது மாறிவிட்டது. 2007 ஆம் ஆண்டு 3179 ஆசிரியர் நியமனத்திற்காக 20000 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன அப்போது பார்க்கும்போது எமது சமூகம் கல்வியில் வளர்ச்சியடைந்திருந்தது.

தற்போதைய சூழ்நிலையில் ஆயிரம் ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதாக இருந்தால் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து சேரலாம் இதைவிடவும் போட்டி நிலைமை எதிர்காலத்தில் உருவாகலாம். 1970 ஆண்டு தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் நாடாளுமன்றம் சென்றார். அதன் பிறகே மலையகமெங்கும் பாடசாலைகள் கட்டப்பட்டன.

மலையகத்தில்

பின்னர் சீடா என்ற வெளிநாட்டு நிறுவனம் இலங்கைக்கு வந்தது. சீடா நிறுவனத்தின் வேலைத்திட்டங்களை மலையகத்திற்கு கொண்டு வர சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்கள் பெரும்பாடுபட்டார். சீடா மலையகத்திற்கு வந்த பின்னரே மலையகத்தில் கட்டிடங்களை காணமுடிந்தது.மலையக சமூகத்தோடு பெரும்பான்மை சமூகம் போட்டி போடுகின்ற அக்கால சூழ்நிலையிலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை எமது சமூகத்திற்காக தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் செய்தார். தோட்டப் பாடசாலைகளாக இருந்த சகல பாடசாலைகளும் அரசாங்க பாடசாலைகளாக பொறுப்பேற்கப்பட்டு முப்பதைந்து வருடங்களை கடந்துவிட்டன.

பல்வேறு வெளிநாட்டு நிதி உதவியுடன் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் நியமனங்கள் பெருவாரியாக வழங்கப்பட்டு தற்போது ஆசிரியர் பற்றாக்குறை பெருமளவில் நிவர்த்திக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு 75 வருட காலப் பகுதியில் மலையகத்தில் பாடசாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள், மின்சார வசதிகள் என்பன பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. மலையகத்தில் இன்று கல்வி வளர்ச்சியடைந்தமைக்குக் காரணம் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் மறைந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுமே ஆகும். இலங்கை தொழிலாளர் காங்கிரசஸினால் மட்டுமே மலையக மக்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும் என்பதை மலையக மக்கள் தற்போது நன்றாக உணர்ந்துள்ளனர் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]