மம்மூட்டி ரசிகர்களுக்கு ரிமா கண்டனம்

மோகன்லால் நடித்த, ‘வெளிபாடிண்டே புஸ்தகம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் வைரலாக இணைய தளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. இப்பாடலை மலையாள இளம் நடிகர் வினித் சீனிவாசன் பாடினார். படத்தில் இப்பாடல் காட்சியில் மோகன்லால் நடிக்காதபோதும் தனி ஆல்பமாக உருவாக்கப்பட்ட பாடலில் இளம் நடன கலைஞர்களுடன் அவரும் இணைந்து ஆடியிருக்கிறார். அதைப்பார்த்து மகிழ்ந்த வினித், ‘வாவ் லால் அங்கிள், ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நீங்கள் ஆடியிருக்கும் ஆட்டம் பிரமாதம்’ என புகழ்ந்திருந்தார். ஆனாலும் வினித்தை மோகன்லால் ரசிகர்கள் வறுத்தெடுத்திருக்கின்றனர். யாரைப்பார்த்து அங்கிள் என்று சொன்னீர்கள். அவரை லாலேட்டன் என்றோ அல்லது மோகன்லால் சார் என்றோ மரியாதையாக குறிப்பிட்டிருக்க வேண்டும் என திட்டித்தீர்த்தனர்.

வினித் மீது பாய்ந்த ரசிகர்கள் மீது மற்றொரு ரசிகர் கூட்டம்,’57 வயது நடிகரை அங்கிள் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. வினித் தந்தை சீனிவாசனுக்கு மோகன்லால் நண்பர் என்பதை மறக்காதீர்கள். அவரை அங்கிள் என்று வினித் அழைத்ததில் தவறில்லை’ என பதிலடி தந்திருக்கின்றனர். மற்றொரு சர்ச்சையில் மலையாள இளம் நடிகை அன்னாராஜன் இணைய தள பக்கத்தில், ‘மம்மூட்டி இனி அப்பா வேடங்களில் நடிக்கலாம்’ என குறிப்பிட்டிருந்தார்.

அதைக்கண்ட மம்மூட்டி ரசிகர்கள் அன்னாராஜனிடம் சண்டைக்கு வந்துவிட்டனர். மம்மூட்டியை எப்படி தந்தை வேடத்தில் மட்டும் நடிக்கச் சொல்லலாம். உங்கள் கருத்துக்கு உடனே மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் விடமாட்டோம் என்றனர். அதைக் கண்டு நடுங்கிப்போனஅன்னாராஜன் உடனடியாக தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் கதறி அழுதார். அன்னாராஜனின் பரிதாப நிலையை கண்டு உர்ரான ரிமா கல்லிங்கல், அன்னாராஜனை திட்டி தீர்த்தவர்களிடம் குறுக்கே புகுந்து நியாயம் கேட்டிருக்கிறார். 65 வயது நடிகர் மம்மூட்டியை தந்தையாக நடிக்க சொல்லியிருந்தார் லிச்சி.

மம்மூட்டியால் அந்த வேடத்தை செய்ய முடியாது என்று நீங்கள்(ரசிகர்கள்) நினைக்கிறீர்களா? அவரால் அதில் கலக்க முடியும். அவர் மிகவும் புத்திசாலியான நடிகர். 70 வயதானவராகவும் அல்லது 30 வயதுடையவராகவும் மம்மூட்டியால் நடிக்க முடியும். திறமையான நடிகைகள் ஷோபனா, ஊர்வசி, ரேவதி போன்றவர்கள் 70 வயதானவர்களாகவும், 30 வயது கொண்டவர்களாகவும் நடிப்பதை ஏற்றுக்கொள்கிறோம் இல்லையா? அன்னாராஜன் சொன்னதற்கு அவரை மன்னிப்பு கேட்க சொல்வது ஏன்? அவர் சொல்வதில் உங்களுக்கு (ரசிகர்கள்) என்ன சிக்கல் ’ என பதிலடி தந்தார்.