மன்னார் மனித எச்சங்களை அமெரிக்காவிற்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி

மன்னார் மனித எச்சங்களை அமெரிக்காவிற்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி

மன்னார் சதொச வளாகத்திலுள்ள மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களை அமெரிக்காவிற்கு அனுப்பிவைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மீட்கப்பட்ட மனித எச்சங்கள் எந்த காலப்பகுதிக்குரியது என்பதை ஆய்வு செய்வதற்கான காபன் சோதனைக்காக அவை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை வழிநடத்தும் மன்னார் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அமெரிக்காவிலுள்ள பீட்டா பகுப்பாய்வு நிறுவகத்திற்கு மனித எச்சங்களின் மாதிரிகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மன்னார் சதொச கட்டட வளாகத்தில் உள்ள மனித புதைகுழியிலிருந்து இதுவரையில் 185 மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் மன்னார் சதொச கட்டட நிர்மாணத்திற்காக நிலம் தோண்டப்பட்டபோது மனித புதைகுழி அடையாளம் காணப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, மனித புதைகுழியை அகழ்வு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அங்கு அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]