மத்திய மாகாண கல்வி அமைச்சு அசமந்தப் போக்கில் ; குற்றஞ்சாட்டும் ராஜாராம்

மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று ஒரு புறம் நாம் கோரிக்கை விடுக்கின்றோம். ஆனால், எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் வளங்களையும் சரியாக பயன்படுத்துகின்றோமா? என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண சபையின் மாதாந்த கூட்டம் சபை தலைவர் நிமலசிறி தலைமையில் நேற்றுகண்டி பல்லேகலையில் அமைந்துள்ள மாகாண கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர். மேலும் வலியுறுத்தியதாவது,

மத்திய அரசு மாகாண பாடசாலைகளுக்கு பாரிய அளவில் நிதியை வழங்கி பாடசாலைகளை அபிவிருத்திச் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆனால், நாம் மாகாண சபை என்ற வகையில் அந்த நிதியையும் வழங்கப்படுகின்ற வளங்களையும் முறையாக பயன்படுத்துவது இல்லை. அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பொழுது இது தெரியவந்துள்ளது.

உதாரணமாக தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் இன்னும் பல பாடசாலைகளில் மத்திய மாகாணத்தில் திறந்து வைக்கப்படாமல் இருக்கின்றன. இதில் பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றது. இதனை மாகாண கல்வி அமைச்சு தேடிப்பார்த்து குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. உதாரணமாக ரிலாமுல்லை தமிழ் மகாவித்தியாலயத்திற்கு தொழில்நுட்ப ஆய்வுகூடத்திற்கு 64 கனிணிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், இவை வழங்கப்பட்டு ஒரு வருடத்தை கடந்த நிலையிலும் இன்னும் அந்தக் கட்டடம் திறந்து வைக்கப்படவில்லை. அந்தக் கனிணிகளுக்கு வழங்கப்பட்ட உத்தரவாத காலமும் நிறைவடைந்து விட்டது. அதேபோல நோர்வுட் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்திற்குச் செல்வதற்கான படிகட்டுகள் அமைக்கப்படவில்லை.இப்படி பல குறைபாடுகள் நிலவுகின்றது.இதனை ஏன் மாகாண கல்வி அமைச்சு தேடிப்பார்க்கவில்லை என்று எனக்கு புரியவில்லை.

கொந்தராத்துகாரார்கள் பலர் சரியாக தங்களுடைய வேலைகளை செய்யவில்லை.ஆனால், அவர்களுக்கு பணமும் வழங்கப்பட்டுள்ளது.ஏன் இதனை தேடிப்பார்த்து உரிய நடவடிக்கை மாகாண கல்வி அமைச்சு எடுக்கவில்லை. நாங்கள் அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கின்றோம். கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை நாம் சரியாக பயன்படுத்துவதில்லை. நான் அண்மையில் மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் அங்குரன் கெத்த தமிழ் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக நடாத்திய பேச்சுகள>லங குறிப்பாக ஆசிரிய பற்றாக்குறையை 50சதவீத அளவிலாவது நிவர்த்தி செய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

மாகாணத்தில் காணப்படும் ஆசிரிய பற்றாக்குறையை தீர்த்துக்கொள்ள பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் ஆளுனரிடம் வைத்திருந்தேன். இதன் பயனாக மாகாண பட்டதாரிகளை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. ஏறக்குறைய 860 பட்டதாரிகள் விண்ணப்பித்திருப்பதாக மாகாண செயலாளர் தெரிவித்தார். இதில் குறிப்பாக விஞ்ஞான பாடத்திற்கு37பேரும் கணித பாடத்திற்கு 8 பேரும் விண்ணப்பித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அடுத்த தவணை ஆரம்பமாவதற்குள் பெரும்பாலும் இவர்களுக்கான நியமனத்தை வழங்கி கஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கு நியமிக்க உள்ளதாக செயலாளர் மேலும் என்னிடம் தெரிவித்தார்.

எனவே மாகாண கல்வி அமைச்சு அதிக அக்கறையுடன் செயற்பட்டால் மாத்திரமே பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய முடியும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]