மத்திய மாகாணத்தின் தமிழ் கல்விப் பிரச்சினைகள் சோ.ஸ்ரீதரனின் கோரிக்கைக்கு செவிசாய்த்த மாகாண முதலமைச்சர் ஏக்கநாயக்க

மத்திய மாகாணத் தமிழ்க் கல்விப் பிரிவில் தற்போது ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகள் குறித்து மத்திய மாகாண கல்வி மற்றும் பிரதான அமைச்சின் ஆலோசனைக் குழுவின் கவனத்துக்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் கொண்டுவந்துள்ளார்.

மத்திய மாகாணத்தின் தமிழ் கல்வி

மத்திய மாகாண முதலாமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் நேற்றுமுன்தினம் மத்திய மாகாணசபை கட்டடத் தொகுதியில் இந்த ஆலோசனைக்குழுக் கூட்டம் இடம் பெற்றது.

இதன்போது, ஹங்குரன்கெத்த கல்வி வலயத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் 108 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை காணப்படுகின்றது. முல்லோயா தமிழ் பாடசாலையில் காணப்படுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையால் இந்தப்பாடசாலையின் பெற்றோர்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தியதோடு மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளரையும் சந்தித்துத் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன். நுவரெலியா கல்வி வலயங்களிலுள்ள தமிழ் பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றங்கள் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளன.
இவ்விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்தவும். கம்பளை, நுவரெலியா கல்வி வலயங்களிலுள்ள தமிழ் மொழிப்பிரிவுகளுக்கு இதுவரை மேலதிகக் கல்விப் பணிப்பாளர்கள் நியமிக்கப்படாமைக்குக் காரணமென்ன? பல கேள்விகளை சோ. ஸ்ரீதரன் தொடுத்தார்.

மத்திய மாகாணத்தின் தமிழ் கல்வி

இந்த விடயங்கள் தொடர்பில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத்ஏக்கநாயக்க பதில் வழங்கிய போது,

“”மத்திய மாகாணத்தில் சிங்கள மொழி மூல பாடசாலைகளில் மேலதிக ஆசிரியர்கள் உள்ள போதும் தமிழ் மொழிமூல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக காணப்படுகின்றது. ஹங்குரன்கெத்த கல்வி வலயத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு ஓய்வுப்பெற்ற ஆசிரியர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை விரைவில் இடம் பெறவுள்ளதால் இந்த பட்டாதாரி ஆசிரியர் நியமனத்தின் போது ஹங்குரென்கெத்த கல்வி வலயத்துக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

நுவரெலியா மாவட்ட கல்வி வலயங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். வலயக்கல்விப் பணிமனைகளுக்கு மேலதிக கல்விப்பணிப்பாளர்கள் என்ற பதவி நிலைகள் இல்லை. எனினும் கம்பளை, நுவரெலியா கல்வி வலயங்களில் தமிழ் மொழிப்பிரிவுக்குப் பொறுப்பானவர்கள் நியமிக்கப்படுவது தொடர்பில் ஆலோசிக்கப்படும்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]