மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணியாளர்களை அனுப்புவதில் புது முறைமை

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணியாளர்களை அனுப்பும்போது பணிபுரியும் இடம் மற்றும் உரிமையாளர் தொடர்பில் பெற்றுக்கொள்ளும் தகவல்களில், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உடல் மற்றும் மனநிலை குறித்த தகவல்களை உள்ளடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவுடன் கலந்துரையாடி வேலைத்திட்டமொன்றை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வீட்டு பணியாளர்களை அனுப்பும்போது, அவர்கள் பணிபுரியும் வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை, வீட்டின் அளவு, உரிமையாளரின் தொழில் உள்ளிட்ட விவரங்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

எனினும், வீட்டில் வசிப்பவர்களின் உடல் மற்றும் மனநிலை குறித்து தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுவதில்லை என, பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம், பணியாற்றிய வீட்டின் உறுப்பினரால் இலங்கை பணிப்பெண் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

அந்த வீட்டில் மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருப்பதை அறியாமல் அங்கு பணிபுரிய குறித்து பெண் சென்றிருந்ததாக பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தவிர்த்துக்கொள்வதற்காக குடும்ப உறுப்பினர்களின் தகவல்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க தீர்மானித்ததாக பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]