மத்தல விமான நிலையம் மீதான இந்தியாவின்ஆதிக்கத்தை குறைக்க அரசாங்கம் முயற்சி

மத்தல விமான நிலையத்தை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யும் இந்தியாவின் திட்டம் குறித்து நாளை பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன. மத்தல விமான நிலையத்தின் 70 வீத பங்குகளை 205 மில்லியன் டொலருக்கு, அபிவிருத்தி செய்து, 40 ஆண்டுகளுக்கு அதனை இயக்குகின்ற திட்டம் ஒன்றை இந்திய அரசாங்கம் முன்வைத்திருந்தது.

கடந்த மே மாதம் இந்திய அரசாங்கம் இந்த யோசனையை முன்வைத்திருந்தது. இந்த திட்டம் குறித்து, மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்திருந்தது.

இந்த நிலையில், இந்த திட்டம் தொடர்பாக அரசாங்கம் இந்தியத் தரப்புடன் பேச்சுக்களை நடத்தவுள்ளது. குறிப்பாக, இந்தியாவுக்கு 70 வீத பங்குகளையும், இலங்கைக்கு 30 வீத பங்குகளையும் பகிரும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள யோசனையைத் திருத்துவதில் இலங்கை கவனம் செலுத்தவுள்ளது.

இந்தியாவுக்கு பெரும்பான்மை பங்குகளை கொடுக்காமல், கூடுதல் பங்குகளை வைத்திருப்பது குறித்து இலங்கை பேசவுள்ளது. இந்தியாவுக்கு 49 வீதமும், இலங்கைக்கு 51 வீதமும் என்ற அடிப்படையில் பங்குகளைப் பகிர்ந்து கொள்வதற்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் நாளைய பேச்சுக்களில் முயற்சிக்கவுள்ளது.

அதேவேளை, இந்த கூட்டு முயற்சி உடன்பாட்டில், விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு, சிவில் விமான ஒழுங்குமுறைகளை இந்தியாவுக்கு வழங்க முடியாது என்றும், தனியே வர்த்தக செயற்பாடுகளை மட்டுமே கொடுக்க முடியும் என்றும், போக்குவரத்து அமைச்சின் செயலர் நிகால் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது போல, 40 ஆண்டுகள் குத்தகைக் காலத்தை குறைப்பதற்கும் இலங்கை திட்டமிட்டுள்ளது,

அதேவேளை, மத்தல விமான நிலையத்தின் சொத்துக்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மதிப்பீட்டு அறிக்கையைப் பொறுத்தே, பங்குகளின் அளவு தீர்மானிக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]