மத்தல விமான நிலையம் தொடர்பில் பேச்சு நடத்த வந்துள்ள இந்திய குழு

மத்தல விமான நிலையத்தை கூட்டு முயற்சியாக இயக்குவது தொடர்பாக முதற்கட்டப் பேச்சுக்களை நடத்துவதற்கு இந்திய அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு வந்துள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “இந்தியாவுடன் இணைந்து மத்தல விமான நிலையத்தை கூட்டு முயற்சியாக செயற்படுத்துவதற்கு, திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 70 வீத பங்குகள் இந்தியாவுக்கு வழங்கப்படும். 30 வீதத்தை இலங்கை வைத்துக் கொள்ளும்.

இதுதொடர்பான ஆரம்ப கட்ட பேச்சுக்கள், தற்போது கொழும்பில் தங்கியுள்ள இந்திய அரசாங்கப் பிரதிநிதிகளுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, விமான நிலையத்தின் மதிப்பீட்டுப் பணிகள் இடம்பெறுகின்றன.

ஆரம்பக் கட்ட மதிப்பீடுகள் முடிந்துள்ளன. இதன்படி, 70 வீத பங்குகளை எடுத்துக் கொண்டு இந்திய அரசாங்கம், 225 மில்லியன் டொலரை கொழும்புக்கு வழங்கும்.

இந்தக் கூட்டு முயற்சிக்கான காலம் குறித்து தற்போது விவாதிக்கப்படுகிறது. இரண்டு தரப்புகளும் இணக்கம் கண்ட பின்னர், இந்த உடன்பாடு அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும். எனினும், மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்கும் எண்ணம் அரசாங்கத்துக்குக் கிடையாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]