மத்தல விமான நிலையத்தில் விமானப்படை முன்வைத்துள்ள வேண்டுகோள்

மத்தல விமான நிலையத்தை அவசர தேவைகளுக்கும், தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்கும் பயன்படுத்துவதற்கான உரிமையையும், விமான நிலையத்தின் ஒரு பகுதி நிலத்தையும் தமக்கு வழங்க வேண்டும் என்று விமானப்படை கோரிக்கை விடுத்துள்ளது.

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கை விமானப்படை இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

அவசர தேவைகளின் போதும், தேசிய பாதுகாப்பு பயன்பாடுகளுக்காகவும், மத்தல அனைத்துலக விமான நிலையத்தின் ஒரு ஓடுபாதைதையைப் பயன்படுத்துவதற்கு தமக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று இலங்கை விமானப்படை கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், தேவைப்பட்டால் இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கென, விமான நிலையத்தின் ஒரு பகுதி நிலத்தையும் தமக்கு ஒதுக்கித் தருமாறும் இலங்கை விமானப்படை கோரியுள்ளது.

தேசிய பாதுகாப்பு நலன்களைக் காரணம் காட்டி இலங்கை விமானப்படை மத்தல விமான நிலையத்தின் ஓடுபாதை மற்றும் நிலம் என்பனவற்றைப் பயன்படுத்த அனுமதி கோரியிருப்பதாக, சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நிமலசிறி தெரிவித்துள்ளார்.

800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மத்தல விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து செயற்படுத்தவதற்கான முயற்சிகளில் சிறிலங்கா விமானநிலைய மற்றும் விமானசேவை அதிகாரசபை நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலேயே சிறிலங்கா விமானப்படை இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

800 ஹெக்ரெயர் பரப்பளவில் அமைந்துள்ள விமான நிலையத்தில், 3 ஹெக்ரெயர் நிலப்பரப்பு விமான எரிபொருள் களஞ்சியப்படுத்தலுக்காக, சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கை விமானப்படை இந்த நிலப்பரப்பில் 90 ஹெக்டேயர் பகுதியை பாதுகாப்புத் தேவைகளுக்கு என்று கோரியுள்ளது.

எனினும் இலங்கை விமானப்படையின் இந்தக் கோரிக்கை இந்தியாவுடனான கூட்டு முயற்சியைப் பாதிக்காது என்று சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நிமலசிறி தெரிவித்துள்ளார்.