மது போதையில் மயங்கிவிழுந்த பெண்ணை அசைக்க முடியாமல் அகன்ற போலீசார்

மது போதையில் மயங்கிவிழுந்த பெண்ணை அசைக்க முடியாமல் அகன்ற போலீசார்

மதுக்குடித்து விட்டு மதிமயங்கிய நிலையில் கிராமப்புற வீதியோரத்தில் வீழ்ந்து கிடந்த பெண்ணை எழுந்திருக்கச் செய்ய முடியாது தோல்வியடைந்த நிலையில் பொலிஸார் அங்கிருந்து அகன்று சென்றதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணிப் பிரதேசத்தில் வெளியிடமொன்றிலிருந்து மதுக்குடித்த நிலையில் வந்த பெண் மதுவெறியில் நிதானமிழந்து கிராமப்புற வீதியோரத்தில் நிலைகுலைந்து வீழ்ந்து கிடந்துள்ளார்.

இதனை அவதானித்த கிராம மக்கள் இப்பெண் மது குடித்துள்ளார் என்பதை அறியாது வேறேதோ விபரீதம் நிகழ்ந்து விட்டதெனக் கருதி அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்து உதவி கோரியுள்ளனர்.

அதன்படி அரை மணிநேரத்திற்குள் உரிய இடத்திற்குப் பொலிஸார் வந்து சேர்ந்துள்ளனர்.

அளவுக்கு மீறி மதுக் குடித்ததால்தான் அப்பெண் நிதானமிழந்து வீதியோரத்தில் வீழ்ந்து கிடப்பது அப்போது தெரியவந்துள்ளது.

எனினும், அப்பெண்ணை விசாரிப்பதற்காக எழுந்திருக்கச் செய்வதற்கு பொலிஸார் முடிந்தளவு சத்தம் போட்டும் பெண்ணால் எழுந்திருக்க முடியவில்லை.

பெண் பொலிஸாரும் ஸ்தலத்திற்கு வந்திருக்காததால் வேறு வழியின்றி மதுக்குடித்த பெண்ணை எதுவும் செய்ய முடியாது தூரத்தில் நின்றே அவதானித்து விட்டு பொலிஸார் அகன்று விட்டனர்.

சற்று நேரத்தில் மதுவெறி அகன்ற நிலையில் நிதானத்திற்கு வந்த அந்த இளம் பெண் பொலிஸார் ஸ்தலத்திற்கு வந்ததை அறிந்ததுடன் தான் வீதியில் வீழ்ந்து கிடந்த அவமானத்தையும் நினைத்து வெட்கித்தவராக ஆடையைச் சரி செய்து கொண்டு அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக ஓடித் தப்பியதாக ஊர்மக்கள் தெரிவித்தனர்.

இப்பிரதேசத்தில் இளம்பெண்ணொருவர் இப்படி அளவுக்கு அதிகமாக மதுக்குடித்து மயங்கி வீழ்ந்து கிடந்தது இதுவே முதற் தடவையென்று கிராம மக்கள் பேசிக் கொண்டனர்.

சம்பந்தப்பட்ட பெண் வெளியூர்வாசி என்று தெரியவருவதாக கிராம மக்கள் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]