சட்ட விரோதமான முறையில் ஆற்று மணல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மணல் குவாரி முற்றுகை

சட்ட விரோதமான முறையில் ஆற்று மணல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மணல் குவாரி முற்றுகை.

மணல் குவாரி

மட்டக்களப்பு கொடுவாமடு காயான்குடாப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் ஆற்று மணல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மணல் குவாரியொன்றினை இன்று (22) புதன்கிழமை ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து முற்றுகையிட்டதாக பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம் தெரிவித்தார்.

இங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்ட சுமார் 50 டிப்பர் (150 கீப்) ஆற்று மணல் மற்றும் மணல் ஏற்றிய நிலையில் இருந்த டிப்பர் ரக வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைளுக்காக கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

கொடுவாமடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட காயான்குடா பள்ளிவாயல் அருகில் சட்டவிரோதமான முறையில் சுமார் 500 டிப்பர் ஆற்று மணல் களஞ்சியப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணத்திற்கு கிடைத்த ரகசிய தகவலொன்றினையடுத்து உதவிப் பிரதேச செயலாளர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் தலைமையில் சென்ற அதிகாரிகள் குழு குறித்த இடத்தை முற்றுகையிட்டு விசாரணை செய்த போது குறித்த மணல் குவாரி உரிமையளர் அனுமதிப் பத்திரம் சமர்ப்பிக்கவில்லை.

மணல் குவாரி

இதையடுத்து குறித்த குவாரியில் களஞ்சியப்படுத்தபட்ட ஆற்று மணல் மற்றும் மணல் ஏற்றிய நிலையில் இருந்த டிப்பர் ரக வாகனமும் கைப்பற்றப்பட்டன.

குறித்த மணல் குவாரியில் களஞ்சியப்படுத்தப்பட்ட மணலின் ஒரு பகுதி அருகிலுள்ள மணல் குவாரிகளுக்கு இரவோடு இரவாக மாற்றப்பட்டுள்ளதுடன் அதிகாலை வேளை டிப்பர் ரக வாகனங்களில் விற்பனைக்காகவும் அனுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வடகீழ் பருவ மழை காலம் ஆரம்பித்துள்ளதனால் மாவட்டத்துக்குள்ளேயும் வெளிமாவட்டங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மணல் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலமாக சட்ட விரோதமான முறையில் ஆற்று மணல் ஏற்றுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பட்ட போதிலும் அதிகாரிகளின் நடவடிக்கைள் மந்த கதியிலேயே நடைபெற்றுள்ளன. ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்கு புதிதாக கடமையேற்றுள்ள ந.வில்வரெடனத்தின் அதிரடி நடவடிக்கை மூலம் குறித்த மணல் குவாரி முற்றுகையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]