மட்டு. மாவட்டத்தை வளப்படுத்துவதற்கு கட்சி வேறுபாடுகளை மறந்து செயற்படுக: வியாழேந்திரன் எம்.பி.

மட்டக்களப்பு மாவட்டத்தை வளப்படுத்துவதிலே சரியான அபிவிருத்தி நோக்கிலே கொண்டு போவதாக இருந்தால் இந்த மாவட்டத்திலே இருக்கின்ற அனைத்து அரசியல் தலைவர்களும் கொள்கை, கட்சி வேறுபாடுகளை மறந்து மாவட்டத்தின் முன்னேற்றம் என்ற விடயத்திலே ஒரு சிந்தனையோடு செயற்பட வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்டத்துக்கான ஐந்தாண்டு அபிவிருத்தித்திட்ட வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:

“”யுத்தத்தில் மிகப் பாதிப்புக்குள்ளான மாவட்டமாக கிழக்கு இருந்தபோதிலும் யுத்தத்தின் பின்பு இந்த மாவட்டத்தினுடைய சகல துறைசார் வளர்ச்சிகளை ஏற்படுத்துவதிலே இந்த மாவட்டத்தினுடைய அரசஅதிபர் மற்றும் அவரது வழிகாட்டல்களின் கீழ் இயங்குகின்ற பிரதேச செயலாளர்கள் ஏனைய துறைத் தலைவர்கள் உத்தியோகத்தருடைய பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டம் கல்வியிலே மிகமோசமான நிலையிலே போய்க்கொண்டிருப்பதைப் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஆகவே, நாங்கள் அந்த கல்வித்துறை சார்ந்து சரியான திட்டமிடல்களை மேற்கொள்ளவேண்டும். அதேபோன்று இந்த மாவட்டத்திலே வறுமை இதற்கு காரணமாய் இருக்கின்ற நுண்கடன் நிதி என்ற விடயத்தில் நாங்கள் கலந்து ஆலோசித்து ஒரு சரியான தீர்க்கமான முடிவை எடுத்து இந்த மக்களைப் பாதுகாக்க வேண்டும்.

மட்டு. மாவட்டத்தை

இவ்வாறான வேலைத்திட்டங்களைப் பொறுத்தளவிற்கு இந்த மாவட்டத்திலே இருக்கின்ற அரசியல்வாதிகள் எல்லோரும் ஒன்று பட வேண்டும். இந்த மாவட்டத்தை வளப்படுத்துவதிலே ஒவ்வொருவரும் ஒரு கட்சி சார்ந்து இருக்கலாம். வெவ்வேறு கொள்கை கோட்பாடு இருந்தாலும் இந்த மாவட்டத்தை சரியாக வளப்படுத்துவதிலே இந்த மாவட்டத்தை சரியான அபிவிருத்தி நோக்கிலே கொண்டு போவதாக இருந்தால் நிச்சயமாக இந்த மாவட்டத்திலே இருக்கின்ற அனைத்து அரசியல் தலைவர்கள் அனைவருமே மாவட்டத்தின் முன்னேற்றம் என்ற விடயத்திலே ஒரு சிந்தனையோடு செயற்பட வேண்டும்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]