பூர்வீக வரலாற்றுப் பொக்கிஷங்கள் சேதம் விளைவிப்பதை தடுத்து நிறுத்துமாறு கிராம மக்கள் வேண்டுகோள்

மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆலங்குளம் கிராமத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் காணப்படும் பூர்வீக வரலாற்றுப் பொக்கிஷங்களான நடுகற்கள், மற்றும் சோதையன் கட்டுக்கள், குளம் என்பனவற்றை அழிப்பதையும் சேதம் விளைவிப்பதையும் தடுத்து நிறுத்துமாறு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது விடயமாக ஆலங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் குமாரசிங்கம் கேஸ்வரன் வியாழக்கிழமை 19.10.2017 கருத்துத் தெரிவிக்கும்போது இந்த விவரங்களைக் குறிப்பிட்டார்.

ஆலங்குளம் கிராமத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் தொல்லியல் வரலாற்றுச் சான்றுகளாக கருங்கல்லால் செதுக்கிச் செய்யப்பட்ட நடு கற்கள், வண்ணாத்தி என்ற தமிழ் சிற்றரசி ஆட்சி செலுத்தியதாக நம்பப்படும் செதுக்கப்பட்ட கருங்கற்களைக் கொண்டு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட நடுகற்கள் மற்றும் சோதையன்கள் என்று நம்பப்படும் பலசாலிகளான ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட குளக் கட்டுக்கள் என்பன காணப்படுகின்றன.

இவை வரலாற்றுப் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

நன்கு செதுக்கப்பட்ட கருங்கற் தூண்களில் உள் குழி விழுந்த நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட அடையாளங்கள் வரிசையாக இருக்கின்றன.

அந்த நேர்த்தியான செதுக்கப்பட்ட கற்கள் நிலமட்டத்தோடு பல ஏக்கர் சதுர நிலப்பரப்பை உள்ளடக்கியதாக கிடப்பில் வரிசையாக நாட்டப்பட்டுள்ளன. சில இடங்களில் குத்தாக நாட்டப்பட்டுள்ளன.

கருங்கல்லோடு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத இந்த மணற்பாற்கான ஆலங்குளம் பகுதியிலும் ஆங்காங்கே நாட்டப்பட்ட கருங்கற்கற் பாளங்கள் தூண்கள் முளைகளாக நிற்கின்றன.

வண்ணாத்தி என்ற புராதன சிற்றரசியின் பாலத்தின் நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட கருங்கற் தூண்கள் நீர்மட்டத்திலிருந்து சுமார் 10 அடி உயரமானவை அந்த ஆற்றுக்குக் குறுக்கே முளைகளாக நாட்டப்பட்டுள்ளன.

இத்தகைய கருங்கற் தூண்கள் நாட்டப்பட்டுள்ள எந்த இடத்தை நோட்டமிட்டாலும் அந்த இடத்தின் சூழமைவுக்குள் நீர்த்தடாகம் அமைக்கப்பட்டிருந்ததற்கான தடயங்களைக் காணக்கூடியதாக இருக்கும்.

ஆனால், இவ்வாறான தொல்லியல் பொருட்கள் சிலரால் பிடுங்கி குவிக்கப்பட்டுள்ளன.

மேலும், சோதையன் கட்டுக் குளம் பாரிய இயந்திரங்களைக் கொண்டு இருந்த இடம் தெரியாமல் சமப்படுத்தப்பட்டுள்ளது. “சோதையர்கள்” ஆண்ட இடம் பேய்க் கல் என்றும் சொல்வார்கள்.

இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரிகள் ஏன் முன்வரவில்லை என்பது மர்மமாக இருக்கின்றது.

கிராம மக்களிடம் காணப்படும் ஆர்வம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் இல்லாமற் போயிருப்பது ஒரு வித ஏமாற்றத்தையும் அவர்களது கடமையுணர்வு பற்றிய கேள்வியையும் எழுப்பியுள்ளது.

எனவே, இதுகுறித்து உடனடியாக அக்கறையுள்ள தரப்பார் கவனத்தில் எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பாக நாம் வினயமாகக் கேட்டக் கொள்கின்றோம்.

அதேவேளை கீழ் மட்ட அதிகாரிகளின் கடமைத் துஷ்பிரயோகத்தால் இத்தகைய செயல்கள் இடம்பெறுமாயின் அதுகுறித்து உயர்மட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]