மட்டக்களப்பு யாழ்ப்பாணம் பஸ்களில் மீண்டும் சோதனை நடவடிக்கைகள்

மட்டக்களப்பு யாழ்ப்பாணம்

மட்டக்களப்பு யாழ்ப்பாணம் சேவையிலீடுபடும் பொதுப் போக்குவரத்து பஸ்களில் மீண்டும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சமீப சில தினங்களாக ஊகிக்க முடியாத இடங்களில் பஸ்கள் திடீர் திடீரென நிறுத்தப்பட்டு சில நேரங்களில் சிவிலுடையிலும், சில நேரங்களில் சீருடையிலும் காணப்படும் பொலிஸார் பயணிகளின் பொதிகளைச் சோதனையிடுகின்றனர்.

இரவு நேர மற்றும் பகல் நேர பொதுப் போக்குவரத்து பஸ்களில் பயணிக்கும் பொது மக்கள் மற்றும் அவர்களது வசமுள்ள பொதிகள் இவ்விதம் சோதனையிடப்படுகின்றன.

சிவிலுடையில் காணப்படும் பொலிஸார், பொது மக்கள் சந்தேகிப்பார்களாயின் தாங்கள் பொலிஸார் என்பதை தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து உறுதிப்படுத்திய பின்னர் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதிகள், மாங்குளம் மற்றும் வவுனியா நகர் போன்ற இடங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டு இந்த சோதனைகள் இடம்பெறுகின்றன.

யுத்த காலத்தில் இடம்பெற்றது போன்ற கெடுபிடிகள் நிறைந்ததாக தற்போதைய வழிமறிப்பு சோதனைகள் இல்லையாயினும் திடீர் சோதனைகள் யுத்த காலக் கெடுபிடிகளையும் நெருக்கடிகளையும் நினைவூட்டுவதால் தாம் ஒரு வித பயப்பீதியில் உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

புதிய சோதனை நடவடிக்கைகளால் சாதாரணமான பயண நேரம் சுமார் 30 – 45 நிமிடங்கள் வரை அதிகரித்திருப்பதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

வடபகுதியில் இருந்து கேரளக் கஞ்சா கடத்தல் வாள் வெட்டுக் கலாச்சாரம், மற்றும் மர்ம ஆயுதங்களின் புழக்கம் என்பனவற்றின் எதிரொலியாகவே இந்தவித சோதனைகள் மீண்டும் துவங்கியிருப்பதாக பரவலாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, தமிழர் அரசியல் உள் குழப்பங்களின் பிரதிபலிப்பாகவும் இந்த விடயங்கள் இடம்பெறுவதாக கண்ணோட்டக் காரர்கள் தெரிவிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]